ஆபத்தில் தங்கவயல் ஆஷ்ரியா வீடுகள் காரை விழுந்து மூதாட்டி காயம்
ஆபத்தில் தங்கவயல் ஆஷ்ரியா வீடுகள் காரை விழுந்து மூதாட்டி காயம்
ADDED : ஜன 24, 2024 05:49 AM

தங்கவயல், : அரசின் ஆஷ்ரியா குடியிருப்பு வீட்டுக் கூரையின் சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்து, படுத்திருந்த 65 வயது மூதாட்டி படுகாயம் அடைந்தார்.
ராபர்ட்சன்பேட்டை சஞ்சய் காந்தி நகர் குடிசை பகுதியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு, 140 வீடுகளை ஆஷ்ரியா திட்டத்தில், கர்நாடக அரசு கட்டிக்கொடுத்தது. பெரும்பாலான ஏழை கூலித்தொழிலாளர் குடும்பங்கள் இங்கே வசித்து வருகின்றனர்.
இவற்றில் பெரும்பாலான வீடுகள், தற்போது மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன. எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என்ற பயம் இருந்து வருகிறது.
இந்த வீடுகளில் வசிக்கும் செருப்பு தைக்கும் பெண் தொழிலாளி முத்தாலம்மா, 65, என்பவர், சம்பவத்தன்று வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரின் வீட்டுக் கூரையின் காரை, பெயர்ந்து விழுந்துள்ளது. இதில் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதை அறிந்த அக்கம் பக்கத்தினர், அவரை ராபர்ட்சன்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தீவிர சிகிச்சைக்காக கோலார் மாவட்ட எஸ்.என்.ஆர்., அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
சஞ்சய் காந்தி நகரில் உள்ள 140 ஆஷ்ரியா வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் விழும் ஆபத்தில் இருப்பதாக, குடியிருப்போர் தெரிவித்தனர்.
இதன் மீது நகராட்சியோ, மாவட்ட நிர்வாகமோ பார்வையிட்டு உதவிட வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுஉள்ளனர்.

