அணுசக்தியிலும் தனியாருக்கு வாய்ப்பு: அடுத்த புதிய சட்ட திருத்தம்; தயாராகுது மத்திய அரசு
அணுசக்தியிலும் தனியாருக்கு வாய்ப்பு: அடுத்த புதிய சட்ட திருத்தம்; தயாராகுது மத்திய அரசு
UPDATED : மே 19, 2025 07:32 PM
ADDED : மே 19, 2025 10:51 AM

புதுடில்லி : நாட்டின் அணுசக்தி உற்பத்தியை அதிகரிக்க இதுவரை இல்லாத அளவிற்கு தனியார் மயத்திற்கு வழிவிட மத்திய அரசு தயாராகி வருகிறது. இதற்கென 1962ல் இயற்றப்பட்ட சட்டத்தில் திருத்தம் கொண்டுவர கனகச்சிதமாக வேலை நடந்து வருவதாக டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து ஆட்சியில் இருந்து வரும் நிலையில் பழைய சட்டங்களை அகற்றியும், புதிய சட்ட திருத்தங்களையும் கொண்டு வந்து புதிய வழியை உருவாக்கி வருகிறது. காஷ்மீர் பிரிப்பு, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, இந்திய குடியுரிமை சட்ட திருத்தம், சாதிவாரி கணக்கெடுப்பு, முத்தலாக் ரத்து, வக்ப் வாரிய சட்ட திருத்தம் , ஒன்ரேங்க் ஒன் பென்ஷன், இவ்வாறு பல சட்டங்கள் வடிவிற்கு வந்துள்ளன. இதன் இன்னொரு புதிய முயற்சியாக அணுசக்தி உற்பத்தியில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. வரும் மழைக்கால கூட்ட தொடரில் இந்த சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு வட்டார தகவல் தெரிவிக்கிறது.
புதிய அணுகுமுறையாக தனியார் நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் கூட, அணுசக்தி உற்பத்தியில் நுழைய ஏதுவாக, 1962ம் ஆண்டு அணுசக்திச் சட்டத்தில் திருத்தங்கள் வரவுள்ளன.
தடைகளை நீக்கும்
இது தவிர, இந்தத் துறையில் முதலீட்டை ஈர்ப்பதற்காக பல பெரிய முடிவுகள் எடுக்கப்படும். இதற்காக, சட்டத்தில் உரிய மாற்றம் செய்யப்படும். உண்மையில், இந்திய அரசாங்கம் அணுசக்தித் துறையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போகிறது என்றே சொல்லலாம். இந்தத் திருத்தங்கள் வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதில் தடையாக இருக்கும் சட்டத் தடைகளை நீக்கும். இந்த சட்டத்தில் 2 முக்கிய மாற்றங்கள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இது மிக பெரிய சவாலானதாகவே இருக்கும்.
20 ஜிகாவாட்டாக உயரும்
இதுவரை இந்தியாவின் அணுசக்தித் துறை முழுமையாக அரசு கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகிறது. இந்தத் துறையில் அணுசக்தி கழகம் நியூக்ளியர் பவர் கார்ப்பரேசன் ஆப் இந்தியா லிமிடெட், (NPCIL) மற்றும் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்ரேசன் லிமிடெட் (NTPC) போன்ற அரசு நிறுவனங்கள் மட்டுமே செயல்பட முடியும். நாடு முழுவதும் உள்ள 24 அணு மின் நிலையங்கள் மூலம் இந்தியா தற்போது 8.1 ஜிகாவாட் அணுசக்தி திறன் உற்பத்தி செய்கிறது. மேலும் 2032ம் ஆண்டுக்குள் இதை 20 ஜிகாவாட்டாக அதிகரிக்க முடியும் என அரசு நம்புகிறது.