ADDED : மார் 19, 2025 06:57 PM

புதுடில்லி : காசாவில் நிலவும் சூழ்நிலை கவலையளிக்கிறது. பிணைக்கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என இந்தியா கூறியுள்ளது.
கடந்த 2023 அக்., முதல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே நடந்த மோதல், அமெரிக்கா மற்றும் ஐ.நா.,வின் முயற்சியால் 42 நாட்களுக்கு முதற்கட்டமாக போர் நிறுத்த ஒப்பந்தம் அமல் செய்யப்பட்டது. அப்போது இரு தரப்பிலும் பிடித்து வைக்கப்பட்டு இருந்த பிணைக்கைதிகள் சிலர் விடுவிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களும் ஒப்படைக்கப்பட்டன. இருப்பினும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இரு தரப்பும் பரஸ்பரம் குற்றம் சாட்டின. இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் தொடர்பான பேச்சு நடந்து வருகிறது. இந்நிலையில், காசா நகர் மற்றும் சுற்றி உள்ளபகுதிகளில் இஸ்ரேல் நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில்,413 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இது தொடர்பாக நமது வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது; காசாவில் நிலவும் சூழ்நிலை கவலை அளிக்கிறது. அனைத்து பிணைக் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டியது முக்கியம். காசா மக்களுக்கு மனிதநேய உதவிகள் கிடைக்க செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.