இந்திரா எங்களை சிறைவைத்தார்; ஆனால் அவமதித்தது இல்லை: சொல்கிறார் லாலு
இந்திரா எங்களை சிறைவைத்தார்; ஆனால் அவமதித்தது இல்லை: சொல்கிறார் லாலு
UPDATED : ஜூன் 29, 2024 06:54 PM
ADDED : ஜூன் 29, 2024 06:02 PM

பாட்னா: ‛‛ முன்னாள் பிரதமர் இந்திரா எங்களை சிறையில் அடைத்தார். ஆனால், அவமதித்தது கிடையாது '', என பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவருமான லாலு பிரசாத் கூறியுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: முன்னாள் பிரதமர் இந்திரா அமல்படுத்திய அவசரநிலைக்கு எதிராக ஜெய்பிரகாஷ் நாராயண் அமைத்த குழுவின் கன்வீனராக நான் இருந்தேன். ‛மிசா' சட்டத்தின் கீழ் 15 மாதம் சிறையில் அடைக்கப்பட்டேன். அவசர நிலை பற்றி இன்று எத்தனை பாஜ., அமைச்சர்கள் பேசுகின்றனர் என எனக்கு தெரியாது. பிரதமர் மோடி, நட்டா மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் சுதந்திரம் பற்றி நடத்தும் பாடத்தை நான் கேட்டது கிடையாது.
இந்திரா எங்களை சிறையில் அடைத்தார். ஆனால், எங்களை அவமதித்தது கிடையாது. அவரோ அல்லது அவரது அமைச்சரவையில் உள்ளவர்களோ எங்களை தேசவிரோதிகள் என்றோ தேசப்பற்று இல்லாதவர்கள் என்றோ திட்டியது இல்லை. நமது அரசியலமைப்பை உருவாக்கிய அம்பேத்கர் பெருமையை அவமதிக்க அவர் ஒரு போதும் அனுமதிக்கவில்லை. 1975 ம் ஆண்டு, நமது ஜனநாயகத்தில் ஒரு கறை. ஆனால், 2024 ல் எதிர்க்கட்சிகளை மதிக்காதவர்கள் யார் என்பதை மறந்துவிடக்கூடாது. இவ்வாறு அந்த பதிவில் லாலு பிரசாத் கூறியுள்ளார்.