விமான நிலையத்தில் இந்திரா உணவகம் பெங்களூரு மாநகராட்சி அதிகாரி தகவல்
விமான நிலையத்தில் இந்திரா உணவகம் பெங்களூரு மாநகராட்சி அதிகாரி தகவல்
ADDED : ஜன 26, 2024 07:05 AM
பெங்களூரு; ஜனவரி இறுதியில், கெம்பே கவுடா விமான நிலையத்தில், இந்திரா உணவகம் திறக்கப்பட வாய்ப்புள்ளது.
பெங்களூரு மாநகராட்சியின் சுகாதார பிரிவு அதிகாரி சிராஜ் அகமது மதனி கூறியதாவது:
பெங்களூரு வளர்ச்சி துறை அமைச்சருமான, துணை முதல்வர் சிவகுமாரின் உத்தரவுபடி, தேவனஹள்ளியின் கெம்பே கவுடா சர்வதேச விமான நிலைய வளாகத்தில் இந்திரா உணவகம் திறக்கும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.
விமான நிலையத்தின், பார்க்கிங் பகுதியில் இந்திரா உணவகம் அமைக்கப்படுகிறது. இது அனைவருக்கும் உதவியாக இருக்கும். ஓலா, உபர் உட்பட, மற்ற தனியார் டாக்சி ஓட்டுனர்கள் விமான நிலையத்தில், குறைந்த விலைக்கு உணவு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு, இந்திரா உணவகம் திறக்கும்படி, போக்குவரத்துத்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி, மாநகராட்சியிடம் கோரிக்கை விடுத்தார். இதை அமைச்சர் சிவகுமாரும் ஆமோதித்தார்.
இதன்படி விமான நிலைய வளாகத்தில், இந்திரா உணவகம் அமைக்கும் பணி நடக்கிறது. ஜனவரி இறுதியில் உணவகம் செயல்பட வாய்ப்புள்ளது. அதிக விலைக்கு உணவு வாங்க முடியாதோருக்கு, உணவகம் உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநிலம் முழுதும் இந்திரா உணவகங்களின் தரம் உயர்த்தப்படும். அந்தந்த பகுதிகளுக்கு தகுந்தார் போன்று, உணவு வழங்க ஆலோசிக்கப்படுகிறது. கூடுதலாக இந்திரா உணவகங்கள் திறக்கப்படும். உணவகங்கள் விஷயத்தில், முதல்வர் சிறப்பு அக்கறை காண்பிக்கிறார். மருத்துவமனைகள், ஏழைகள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், இந்திரா உணவகங்கள் திறக்கப்படும்.
- ரஹீம்கான்,
அமைச்சர், உள்ளாட்சி துறை

