எல்லா உரிமைகளுக்கும் ஓட்டு ஆதாரம் நீதிபதி முஜாப்பர் மஞ்சரி அறிவுரை
எல்லா உரிமைகளுக்கும் ஓட்டு ஆதாரம் நீதிபதி முஜாப்பர் மஞ்சரி அறிவுரை
ADDED : ஜன 26, 2024 11:53 PM

தங்கவயல்,- “ஓட்டுரிமை தான் மற்ற உரிமைகளுக்கெல்லாம் ஆதாரம்,” என, நீதிபதி முஜாப்பர் மஞ்சரி அறிவுரை வழங்கினார்.
தங்கவயல் மினி விதான் சவுதா அரங்கில் தங்கவயல் தாலுகா சட்ட சேவை குழுமம், வக்கீல்கள் சங்கம் சார்பில் வாக்காளர் தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தங்கவயல் தாசில்தார் நாகவேணி தலைமை வகித்தார்.
அப்போது தங்கவயல் தாலுகா சட்ட சேவை குழுமத் தலைவர் நீதிபதி முஜாப்பர் மஞ்சரி பேசியதாவது:
சுதந்திரம் வேண்டும் என்று போராடி பெற்றோம். அதன் அடையாளமே ஓட்டுரிமை. இந்த ஓட்டுரிமை வந்த பிறகு தான் எல்லா உரிமைகளும் கிடைத்துள்ளன.
நாட்டில் நல்லாட்சி ஏற்படுத்தும் சக்தி ஓட்டு தான். ஒவ்வொருவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும். ஓட்டுரிமை தான் மற்ற உரிமைகளுக்கெல்லாம் ஆதாரமாக உள்ளது.
ஓட்டளிக்க விடுமுறை அளித்தாலும் 50 சதவீதம் பேர் மட்டுமே ஓட்டளிக்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும். அனைவருமே கட்டாயம் ஓட்டளிக்க வேண்டும் என்ற மனோபாவம் நமக்குள் ஏற்பட வேண்டும்.
குறிப்பாக இளைஞர்கள் ஓட்டளிக்க தவறக் கூடாது. சிந்தித்து நாட்டுக்குத் தேவையான திறமைமிக்கவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஆஸ்திரேலியாவில் ஓட்டளிப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதேபோல் நமது நாட்டிலும் நமக்கு நாமே ஓட்டளிப்பதை கட்டாயம் ஆக்கிக் கொள்ள வேண்டும். நமது ஓட்டுரிமையின் வலிமையை அறிந்து கொண்டால் நாம் அனைவருமே தவறாமல் ஓட்டளிப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நீதிபதி மஞ்சுநாத் பேசுகையில், “ஓட்டின் உன்னதமான மதிப்பை ஒவ்வொருவரும் அறிய வேண்டும். அனைவருமே ஓட்டளித்து சிறந்த நல்லாட்சியை உருவாக்குவோம். நமது, ஜனநாயக நாடு. நமது ஓட்டு தான் ஆட்சியை நடத்த சக்தியை அளிக்கிறது. அதன் கண்ணியத்தை மதித்து, ஓட்டுரிமை உள்ள அனைவருமே ஓட்டளிக்க வேண்டும்,” என்றார்.
நிகழ்ச்சியில் ஓட்டுப்போடுவோமென அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
மேலும், கோரமண்டல் ஹென்ட்றீஸ் பகுதியை சேர்ந்த அண்ணாமலை, 103, ஆண்டர்சன்பேட்டை மஸ்கம் பகுதியை சேர்ந்த நவநீதம்மா, 103, ஆகிய இருவரும் கவுரவிக்கப்பட்டனர்.
இவர்கள் இருவரும் நாட்டின் முதல் தேர்தலில் இருந்து ஓட்டளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

