லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் கர்நாடக பா.ஜ., - காங்கிரஸ்
லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் கர்நாடக பா.ஜ., - காங்கிரஸ்
ADDED : ஜன 10, 2024 12:01 AM
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியின் பதவிக்காலம் விரைவில் முடிகிறது. இதனால், பார்லிமென்டிற்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்து எடுக்க, தேர்தல் நடக்க உள்ளது.
இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள, தேசிய ஜனநாயக கூட்டணி விரும்புகிறது. ஆனால், ஆட்சியை தட்டிப்பறிக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன.
'இண்டியா' என்ற பெயரில் கூட்டணி அமைத்து உள்ளனர். இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள 28 லோக்சபா தொகுதிகளில், 2019ல் நடந்த தேர்தலில் 25 இடங்களில் பா.ஜ., அபார வெற்றி பெற்றது.
மேலிடத்திடம் பட்டியல்
காங்கிரஸ், ம.ஜ.த., சுயேச்சை தலா ஒரு இடங்களில் வென்றன. கடந்த லோக்சபா தேர்தலின்போது, கர்நாடகாவில் காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால், இம்முறை ஆளுங்கட்சியாக உள்ள, காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது. பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அமைத்துள்ளன. வரும் தேர்தலில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற, காங்கிரஸ் இலக்கு வைத்து உள்ளது.
பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணியினர் 28 தொகுதிகளிலும் வெற்றி பெற நினைத்து உள்ளனர். இதனால், லோக்சபா தேர்தலுக்கான ஏற்பாடுகளை, இப்போது இருந்தே பா.ஜ., - காங்கிரஸ் கட்சிகள் ஆரம்பித்து விட்டன.
காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பு, அமைச்சர்களிடம் கொடுக்கப்பட்டு இருந்தது. அவர்களும் கட்சியின் மூத்த பிரமுகர்கள், தொண்டர்களின் கருத்துகளை சேகரித்து, வேட்பாளர்களை தேர்வு செய்து, மேலிடத்திடம் பட்டியல் கொடுத்துள்ளனர்.
காங்கிரஸ் மாநில தலைவராக உள்ள துணை முதல்வர் சிவகுமார், கடந்த தேர்தலில் அடைந்த படுதோல்விக்கு பதிலடி கொடுக்க, தீவிரமாக உள்ளார். காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவும், கர்நாடகா வந்து வேட்பாளர்கள் தேர்வு குறித்து, ஆலோசனை நடத்த உள்ளார்.
தேர்வு படலம்
சட்டசபை தேர்தலில் தோற்றதால், பா.ஜ., தலைவர்கள் உற்சாகமிழந்து காணப்பட்டனர். ஆனால், மாநில தலைவராக விஜயேந்திரா நியமிக்கப்பட்டதும், அக்கட்சிக்கு புது தெம்பு கிடைத்து உள்ளது. அதிருப்தி தலைவர்கள், மூத்த தலைவர்களை சந்தித்து, அவர் பேசி வருகிறார்.
லோக்சபா தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று, மகனுக்கு பெயர் வாங்கி தர வேண்டும் என்று, எடியூரப்பாவும் களத்தில் இறங்கி உள்ளார். பா.ஜ.,விலும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் படலம் ஆரம்பித்து உள்ளது.
மூத்த தலைவர்களை ஓரம்கட்டிவிட்டு, இளையவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க, தலைவர் விஜயேந்திரா நினைக்கிறார். பா.ஜ., மேலிடமும், அவருக்கு ஆதரவாக உள்ளது.
காங்கிரஸ் அரசு தேர்தலுக்கு முன்பு, ஐந்து வாக்குறுதிகளை அளித்தது. ஆனால், அதை சரியாக நிறைவேற்ற முடியாமல் அரசும், கட்சியும் திணறி வருகின்றன.
இதை வைத்து மக்களிடம் பிரசாரம் செய்ய, பா.ஜ., திட்டம் வைத்து உள்ளது. கர்நாடகாவில் இருந்து பா.ஜ., - எம்.பி.,க்கள் 25 பேர் இருந்தும், மாநிலத்திற்கு அவர்கள் பங்களிப்பு எதுவும் இல்லை என்ற பிரச்னையை முன்வைத்து, பிரசாரம் செய்ய காங்கிரஸ் தலைவர்கள் தயாராகி வருகின்றனர்.
ஒட்டுமொத்தத்தில் லோக்சபா தேர்தல் ஜுரம் இப்போது இருந்தே ஆரம்பித்து விட்டது. வரும் நாட்களில் தேர்தல் களத்தில் அனல் பறக்க போவது உறுதி.
- நமது நிருபர் -

