வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்: அதிகாரிகள் எச்சரிக்கை
வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்: அதிகாரிகள் எச்சரிக்கை
ADDED : ஜூலை 31, 2024 08:33 AM

வயநாடு: கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 147 பேர் உயிரிழந்த நிலையில், கனமழை தொடர்வதால் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கேரள மாநிலம், வயநாட்டில் பெய்த அதி கனமழையால் மலைகளுக்கு இடையே உள்ள முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் தேயிலை தோட்டங்கள், சுற்றுலா தலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது. இதில் அந்த பகுதியில் அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி 147 பேர் பலியாகினர். நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்ட வீடுகளில் வசித்த 400 பேரின் கதி கேள்விக்குறி ஆனது. பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் உள்ளது.
இந்த நிலையில், வயநாடு உள்ளிட்ட 8 கேரள மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அங்கு தற்போது கனமழை பெய்து வருவதால் வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கவர்னர் ஆய்வு
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இன்று கவர்னர் ஆரிப் முகமது கான், நேரடி ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.
விபத்தில் சிக்கிய அமைச்சர் வாகனம்
வயநாட்டில் நிலச்சரிவில் மீட்பு நடவடிக்கையை ஆய்வு செய்ய கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில் விபத்தில் சிக்கினார். இதனையடுத்து மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.