வெளியுறவு கொள்கை குறித்து விவாதிக்க பார்லி.,யை கூட்ட கார்கே வலியுறுத்தல்
வெளியுறவு கொள்கை குறித்து விவாதிக்க பார்லி.,யை கூட்ட கார்கே வலியுறுத்தல்
ADDED : ஜூன் 13, 2025 01:23 AM

புதுடில்லி: வங்கதேசத்தில், ரவீந்திர நாத் தாகூரின் பூர்வீக இல்லம் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வெளியுறவு கொள்கை பிரச்னைகள் குறித்து விவாதிக்க பார்லி., சிறப்பு கூட்டத்தை கூட்டும்படி வலியுறுத்தி உள்ளார்.
பூர்வீக இல்லம்
நம் நாட்டின் தேசிய கீதத்தை இயற்றியவரும், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளருமான ரவீந்திரநாத் தாகூரின் பூர்வீக இல்லம், அண்டை நாடான வங்கதேசத்தின் சிராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ளது.
இது, தற்போது அருங்காட்சியகமாக செயல்பட்டு வருகிறது.
இங்கு பணிபுரியும் ஊழியருக்கும், பார்வையாளருக்கும் இடையே சமீபத்தில் மோதல் ஏற்பட்டது.
இது வன்முறையாக மாறியதில், அருங்காட்சியகம் மர்ம நபர்களால் சூறையாடப்பட்டது. இதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று கூறியதாவது:
சர்வதேச அளவில் இரண்டு சம்பவங்கள் மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளன. வங்கதேசத்தின் சிராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ரவீந்திரநாத் தாகூரின் பூர்வீக இல்லம் மர்ம நபர்களால் தாக்கப்பட்டது கண்டனத்துக்குரியது. இது ஒரு புறமிருக்க, பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டாளி என பாகிஸ்தானை அமெரிக்கா அழைத்துள்ளது.
பிரச்னை
மேலும், ராணுவ தின கொண்டாட்டத்தில் பங்கேற்கும்படியும் அந்நாடு பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது மிகவும் தீவிரமான பிரச்னை. அமெரிக்கா - இந்தியா இடையேயான துாதரக உறவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காக, மோடி அரசின் வெளியுறவு கொள்கை தோல்வி அடைந்துள்ளது. இந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்க, பார்லி., சிறப்பு கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.