வளங்களை திருட லாலு - காங்., கூட்டணி... தந்திரம் ! பீஹாரில் பிரசாரத்தை துவக்கினார் மோடி
வளங்களை திருட லாலு - காங்., கூட்டணி... தந்திரம் ! பீஹாரில் பிரசாரத்தை துவக்கினார் மோடி
UPDATED : ஜூன் 21, 2025 04:21 AM
ADDED : ஜூன் 21, 2025 01:28 AM

சிவான்: 'சட்ட மேதை அம்பேத்கரை ராஷ்ட்ரீய ஜனதா தளம் தொடர்ந்து அவமதித்து வருகிறது. இதை பீஹார் மக்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். பீஹாரின் பொருளாதார வளங்களை திருட காங்., கூட்டணி பல்வேறு தந்திரங்களை செய்யும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார்.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் தேர்தல் நடக்கவுள்ளது.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தற்போதே தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
பீஹாரின் சிவான் மாவட்டத்துக்கு, இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக நேற்று வந்த பிரதமர் மோடி, 5,900 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்தார்.
அவமரியாதை
இதைத் தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
வாரிசு அரசியலை சட்ட மேதை அம்பேத்கர் எதிர்த்தார். ஆனால் இது, ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்., கூட்டணிக்கு பிடிக்கவில்லை. அதனால் தான், அம்பேத்கரின் உருவப்படத்தை காலடியில் வைத்து, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் அவமரியாதை செய்துள்ளார்.
இச்சம்பவம், பீஹார் மட்டுமின்றி நாடு முழுதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. லாலு பிரசாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை வரும் வழியில் பார்த்தேன். ஆனால், இதுவரை அவர் மன்னிப்பு கேட்கவில்லை.
நான் அம்பேத்கரை என் இதயத்தில் வைத்திருக்கிறேன். அவரது படத்தை என் மார்புக்கு அருகே வைத்துள்ளேன்.
நாள்தோறும் அவரை நினைத்து செயல்படுகிறேன். ஆனால், பீஹாரில் அட்டூழியங்களை செய்து வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்., கூட்டணி, தலித்துகள், ஓ.பி.சி.,க்கள் உள்ளிட்டோரை மதிப்பதில்லை; கொஞ்சம் கூட மரியாதை அளிப்பதில்லை.
தலைவிரித்தாடிய ஊழல்
அம்பேத்கரை விட தங்களை மிகவும் உயர்வானவர்களாக அக்கூட்டணியினர் கருதுகின்றனர்.
அவர்களை பீஹார் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். வெளிநாட்டில் இருந்து நேற்று (நேற்று முன்தினம்) தான் வந்தேன்; வளர்ந்த நாடுகளின் பல தலைவர்களை சந்தித்தேன்.
நம் நாடு முன்னேறுவதை பார்த்து அவர்கள் அனைவரும் வியப்படைந்தனர். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக நம் நாடு நிச்சயம் மாறும். இதில் பீஹாரின் பங்கு பெரிதாக இருக்கும். வளமான பீஹார், நாடு செழிக்க உதவும்.
பீஹாரில் ராஷ்ட்ரீய ஜனதா தள ஆட்சி, காட்டாட்சி போல நடந்தது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, அடிதடி நடந்தது. மாநிலம் முழுதும் ஊழல் தலைவிரித்தாடியது.
இந்த கொள்ளை கும்பலிடம் இருந்து, பீஹாரையும், அதன் மக்களையும் தே.ஜ., கூட்டணி காப்பாற்றியது. முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், தற்போது அனைத்து துறைகளிலும் மாநிலம் வளர்ச்சி நடைபோடுகிறது; இன்னும் பல்வேறு சாதனைகளை புரிய உள்ளது.
சட்டசபை தேர்தல் நெருங்குவதால் பொய் வாக்குறுதிகளை அளித்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்., கூட்டணியினர் முயற்சிக்கின்றனர். இவர்களிடம் பீஹார் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மாநிலத்தின் பொருளாதார வளங்களை திருட அக்கூட்டணியினர் பல்வேறு தந்திரங்களை செய்வர். சட்டசபை தேர்தலில் இவர்களை பீஹார் மக்கள் விரட்டியடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.