லட்சுமண் சவதி மனதை கரைக்க பா.ஜ., தீவிரம் புள்ளி விபரங்களை அடுக்கும் தலைவர்கள்
லட்சுமண் சவதி மனதை கரைக்க பா.ஜ., தீவிரம் புள்ளி விபரங்களை அடுக்கும் தலைவர்கள்
ADDED : பிப் 05, 2024 10:58 PM

பெங்களூரு: கடந்த சட்டசபை தேர்தலில், பெலகாவி, அதானி தொகுதியில் லட்சுமண் சவதி சீட் எதிர்பார்த்தார். ஆனால் பா.ஜ., மேலிடம், வேறொருவருக்கு சீட் கொடுத்தது.
கொதிப்படைந்த லட்சுமண் சவதி, பா.ஜ.,வுக்கு முழுக்கு போட்டு, காங்கிரசில் இணைந்து இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதேபோன்று சீட் கிடைக்காமல், காங்கிரசுக்கு தாவிய ஜெகதீஷ் ஷெட்டரை, பா.ஜ.,வுக்கு அழைத்து வந்த பா.ஜ., தற்போது லட்சுமண் சவதிக்கு குறிவைத்துள்ளது.
அவரை ஈர்க்க முயற்சிக்கிறது. பெலகாவி பா.ஜ., தலைவர்கள், லட்சுமண் சவதியுடன் பேச்சு நடத்தினர். அவரது மனதை மாற்ற முயற்சிக்கின்றனர்.
இம்முறை பீதர் லோக்சபா தொகுதியில், மத்திய அமைச்சர் பகவந்த் கூபாவுக்கு சீட் கொடுக்க, தொகுதி பா.ஜ., தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளனர்.
குறிப்பாக எம்.எல்.ஏ., பிரபு சவ்ஹான் முட்டுக்கட்டை போடுகிறார். மாநில தலைவர் விஜயேந்திரா காலில் விழுந்தே, பகவந்த் கூபாவுக்கு சீட் கொடுக்கக் கூடாது என, மன்றாடினார். இதை பலரும் ஆமோதித்தனர்.
பீதர் தொகுதியில் மராத்திய மொழியினர், அதிகம் உள்ளனர். இவர்களே வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கின்றனர். லிங்காயத் சமுதாயத்தினரும் செல்வாக்கு பெற்றுள்ளனர்.
இந்த இரண்டு சமுதாயத்தினர் ஓட்டுகளை ஈர்க்க, லட்சுமண் சவதி சரியானவராக இருப்பார் என, கட்சியினர் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன் இவர் பா.ஜ.,வில் இருந்த போது, பீதரின் பசவகல்யாணா தொகுதி இடைத்தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
அந்த தொகுதியில் பா.ஜ., வெற்றி பெற்றது. எனவே அவரை பா.ஜ.,வுக்கு ஈர்த்து, பீதர் தொகுதியில் களமிறக்க முயற்சிக்கிறது.