ADDED : ஜன 27, 2024 12:09 AM

தாவணகெரே : “ஜெகதீஷ் ஷெட்டர், குப்பையில் கிடக்கும் பொருளைப் போன்றவர்,” என காங்கிரஸ் எம்.எல்.ஏ., பசவராஜ் சிவகங்கே விமர்சித்து உள்ளார்.
தாவணகெரே சென்னகிரி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பசவராஜ் சிவகங்கே அளித்த பேட்டி:
ஜெகதீஷ் ஷெட்டர் மீண்டும் பா.ஜ.,வுக்குச் சென்றதால், காங்கிரஸ் கட்சிக்கு எந்த நஷ்டமும் இல்லை.
ஏன் என்றால் அவர் குப்பையில் கிடக்கும் பொருளைப் போன்றவர். மூத்த அரசியல்வாதி என்பதால், அவருக்கு மதிப்பு கொடுத்து, எங்கள் கட்சியில் சேர்த்தோம்.
அந்தத் தொகுதியில் 35,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றார். ஆனாலும் நம்மை நம்பி வந்தவரை, கைவிட கூடாது என்று, அவருக்கு எம்.எல்.சி., பதவியை காங்கிரஸ் கொடுத்தது. ஆனால் இன்று அவர், தன் குணத்தை காட்டிவிட்டார். மத்திய அமைச்சராக வேண்டுமென, ஜெகதீஷ் ஷெட்டருக்கு ஆசை வந்துள்ளது.
இதனால் பதவி, அதிகாரத்துக்காக பா.ஜ.,வுக்கு ஓடிவிட்டார்.
அவர் எங்கு போட்டியிட்டாலும், மக்களை அவரை தோற்கடித்து, அரசியலில் இருந்து ஓய்வு பெற வைப்பர்.
முன்னாள் முதல்வர்கள் பங்காரப்பா, ஜே.எச்.படேல் போன்று சித்தாந்தத்துடன் நான் அரசியல் செய்து வருகிறேன். ஆனால் அதிகார ஆசை பிடித்த, ஜெகதீஷ் ஷெட்டர் போன்றவர்களை பார்க்கும்போது, நாமும் அப்படி மாறிவிடுவோமோ என்று பயம் வந்துள்ளது.
பா.ஜ.,வில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு வந்த லட்சுமண் சவதி, தேர்தலில் 80,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அவர் தான் தலைவர். ஜெகதீஷ் ஷெட்டர் தலைவரே இல்லை. ராமர் பெயரை சொல்லி, மக்களை பா.ஜ., ஏமாற்றுகிறது. வளர்ச்சிப் பணிகளை சொல்லி, அவர்கள் ஓட்டு கேட்க மாட்டார்கள். மதத்தின் பெயரில் அரசியல் செய்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

