ADDED : ஜன 27, 2024 12:21 AM
கார்வார்,- ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த, பயங்கரவாதிக்கு நிதி உதவி செய்ததாக, பட்கல்லை சேர்ந்த மதரஸா பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டு உள்ளார்.
சிரியாவில் செயல்பட்டு வரும் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன், இந்தியாவில் இருந்து தொடர்பில் இருப்பவர்கள், அந்த அமைப்புக்கு ஆள் சேர்ப்பவர்களை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த பயங்கரவாதி ஒருவரை, மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில், சில தினங்களுக்கு முன்பு பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து இருந்தனர்.
விசாரணையில் கைதான பயங்கரவாதிக்கும், கர்நாடகாவின் உத்தர கன்னடா பட்கல்லை சேர்ந்த, மதரஸா பள்ளி ஆசிரியை ஆயிஷா, 38, என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. பயங்கரவாதிக்கு, ஆயிஷா நிதி உதவி செய்ததும் தெரிந்தது.
நேற்று முன்தினம் இரவு பட்கல் வந்த, பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், ஆயிஷாவை கைது செய்தனர். அவரது வீட்டில் இருந்து எலக்ட்ரானிக் பொருட்கள், ஐந்து மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆயிஷாவை மும்பைக்கு அழைத்துச் சென்று விசாரிக்கின்றனர்.

