ADDED : மே 21, 2025 09:39 PM
புதுடில்லி:அசோக் விஹாரில் நடந்த கொள்ளை மற்றும் கொலை வழக்கில் தேடப்பட்டவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த பிப்., 25ம் தேதி அசோக் விஹாரில் ஒருவரை கொலை செய்து 16.5 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் ரோகி என்ற மனோஜ் என்பவரை போலீசார் தேடி வந்தனர்.
மேலும், பயாஸ் என்ற ஆலனுக்கு துப்பாக்கி மற்றும் வெடிமருந்து சப்ளை செய்த வழக்கிலும் மனோஜ் தேடப்பட்டார்.
தலைமறைவாக இருந்த மனோஜை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசிடம் சிக்காமல் இருந்த வேறொருவர் பெயரில் பதிவு செய்யப்பட்ட 'சிம்' கார்டு பயன்படுத்தி வந்தார்.
மாநில உளவுப் பிரிவினர் மற்றும் தொழில்நுட்பப் பிரிவினர் அளித்த தகவல்படி, உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் பதுங்கி இருந்த மனோஜ், 15ம் தேதி கைது செய்யப்பட்டார்.
துவாரகா வடக்கு போலீசில் பதிவு செய்யப்பட்ட கொள்ளை மற்றும் கொலை வழக்கிலும் மனோஜ் கைது செய்யப்பட்டு 2022ல் ஜாமினில் வந்து தலைமறைவானார்.
அதேபோல, 2016ம் ஆண்டிலும் துவாரகா போலீசில் பதிவு செய்யப்பட்ட திருட்டு முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது.
ஒன்பதாம் வகுப்பு படித்துள்ள மனோஜ், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். துவாரகா விபின் கார்டன் மற்றும் 16வது செக்டாரில் வசித்த நாகேந்திரன், பப்பர், ரோஹித், ஜனக் மற்றும் பயாஸ் ஆகிய கொள்ளையருடன் சேர்ந்து குற்றவாளியானார்.