வால்மீகி ஆணைய முறைகேட்டில் அமைச்சர் நாகேந்திரா... ஆட்சிக்கு வந்த ஓராண்டிலேயே அம்பலமான ஊழல்
வால்மீகி ஆணைய முறைகேட்டில் அமைச்சர் நாகேந்திரா... ஆட்சிக்கு வந்த ஓராண்டிலேயே அம்பலமான ஊழல்
ADDED : ஜூன் 06, 2024 10:10 PM

பெங்களூரு : வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில், 187 கோடி ரூபாய் முறைகேடு நடந்தது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணையை துவங்கியுள்ள நிலையில், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் நாகேந்திரா, தன் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். பா.ஜ., தலைவர்கள் விதித்த 'கெடு'வுக்கு காங்., அரசு பணிந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சி அமைந்த ஓராண்டிலேயே ஊழல் அம்பலமானதால், காங்., தலைவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
கர்நாடகாவில், வால்மீகி சமுதாயம் பழங்குடியினர் பட்டியலில் உள்ளது. பெங்களூரு வசந்த் நகரில் உள்ள வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் சூப்பிரண்டாக பணியாற்றியவர் சந்திரசேகர், 52. கடந்த மாதம் 27ம் தேதி ஷிவமொகாவில் உள்ள தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆணையத்திற்கு, அரசு ஒதுக்கிய 187 கோடி ரூபாய் நிதியில் மோசடி நடப்பதாக, தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தில் சந்திரசேகர் குறிப்பிட்டிருந்தார்.
* அதிகாரிகள் சஸ்பெண்ட்
அதன் அடிப்படையில், ஆணைய நிர்வாக இயக்குனர் பத்மநாபா, கணக்கு அதிகாரி பரசுராம் துக்கண்ணவர் ஆகியோர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இது தவிர, மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.
ஆணையத்தின், 187 கோடி ரூபாய் நிதியை, வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு முறைகேடாக மாற்றப்பட்டுள்ளதாகவும், இதில் வங்கி அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக, பெங்களூரு ஹைகிரவுண்ட் போலீஸ் நிலையத்தில், ஆணைய பொது மேலாளர் ராஜசேகர் புகார் செய்தார்.
இந்த வால்மீகி மேம்பாட்டு ஆணையம், பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் வருகிறது. எனவே அத்துறை அமைச்சர் நாகேந்திராவுக்கும், முறைகேட்டில் தொடர்பு இருப்பதாகவும், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும்படியும் பா.ஜ., வலியுறுத்தி வந்தது. முறைகேடு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
* சி.பி.ஐ., வழக்கு
இதற்கிடையில், யூனியன் வங்கி தரப்பில், போலி வணங்கி கணக்குகள் துவக்கி நிதி செலுத்தப்பட்டுள்ளதாக சி.பி.ஐ.,க்கு நேற்று முன்தினம் புகார் அளித்தது. சி.பி.ஐ.,யும் வழக்கு பதிவு செய்து, விசாரணையை ஆரம்பித்துள்ளது. இதனால், நாகேந்திராவின் பதவியை பறிக்கும்படி எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்தனர். இதற்கு, நேற்று வரை கால அவகாசம் வழங்கி, ராஜினாமா செய்யாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் பா.ஜ.,வினர் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் தலைமையில், பெங்களூரு விதான் சவுதா வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன், பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.
* கவர்னரிடம் புகார்
பின், அங்கிருந்து ராஜ்பவனுக்கு ஊர்வலமாக புறப்பட்டு, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் புகார் அளித்தனர். அமைச்சர் நாகேந்திரா முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதால், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும்படி வலியுறுத்தினர்.
இந்த சந்திப்பு நிகழ்ந்த சில மணி நேரத்தில், முதல்வர் சித்தராமையா, நாகேந்திராவை தன் இல்லத்துக்கு அவசரமாக வரவழைத்து, ஆலோசனை நடத்தினார். அப்போது, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுவதால், அமைச்சர் பதவியில் இருந்து விலகும்படி முதல்வர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, விதான் சவுதாவுக்கு வந்த நாகேந்திரா கூறியதாவது:
என் மீது முறைகேடு குற்றச்சாட்டு வந்துள்ளது. முதல்வர் சித்தராமையாவுக்கும், துணை முதல்வர் சிவகுமாருக்கும், காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் சங்கடம் ஏற்பட கூடாது என்பதற்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன்.
சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வரும் வேளையில், நான் அமைச்சர் பதவியில் இருப்பதால், அவர்களுக்கு இடையூறு ஏற்படலாம். எனவே மனசாட்சிப்படி, சுய விருப்பத்தின் அடிப்படையில், ராஜினாமா செய்கிறேன். யாரும் எனக்கு நெருக்கடி கொடுக்கவில்லை.
விசாரணையில் சத்தியம் வெளியான பின், மீண்டும் பதவிக்கு வருவேன். கடந்த ஓராண்டு ஆட்சியில், வாக்குறுதி திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளன. முதல்வரும், துணை முதல்வரும் சிறப்பாக நிர்வாகம் நடத்தி வருகின்றனர். என் மீது ஆதாரமின்றி பா.ஜ.,வினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின், முதல்வர் சித்தராமையாவிடம் தன் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். காங்கிரஸ் ஆட்சி அமைந்து ஓராண்டிலேயே, ஊழல் முறைகேட்டில் சிக்கி, ஒரு அமைச்சர் ராஜினாமா செய்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
...பாக்ஸ்...
ரூ.45 கோடி முடக்கம்
வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் இருந்து, தெலுங்கானாவின் ஹைதராபாதில் உள்ள பர்ஸ்ட் பைனான்ஸ் கூட்டுறவு வங்கியின் 18 போலி கணக்குகளுக்கு, 94.73 கோடி ரூபாய் முறைகேடாக செலுத்தப்பட்டிருந்தது. இதில், பெரும்பாலான பணத்தை வங்கியில் இருந்து எடுத்து விட்டனர். இந்த பணம் எங்கே சென்றது என்பது குறித்து விசாரணை நடக்கிறது. இதற்கிடையில், போலி வங்கி கணக்கில் இருந்த 45 கோடி ரூபாய் பணத்தை, சிறப்பு புலனாய்வு குழு நேற்று முடக்கியது.
...புல் அவுட்...
முறைகேடு தொடர்பாக, உள்துறை அமைச்சருடன் நான் ஆலோசித்தேன். முறைகேட்டில், அமைச்சர் நாகேந்திராவுக்கு தொடர்பு இல்லை என்று கூறினார். அவர் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும், சுய விருப்பத்தின் அடிப்படையில் ராஜினாமா முடிவு எடுத்துள்ளார்.
- சிவகுமார், துணை முதல்வர்
***