ADDED : ஜன 26, 2024 06:54 AM
நாட்டில் உள்ள ஒவ்வொரு கோவிலுக்கும், தனித்தனி சிறப்புகள் உள்ளன. கர்நாடகாவிலும் இது போன்ற கோவில்கள் ஏராளம் உள்ளன.
பொதுவாக அந்தந்த கோவில்களின் சம்பிரதாயங்கள், வழிபாடுகள் மாறுபடும். வித்தியாசமான, அதிசயிக்கத் தக்க வழிபாடுகளை பக்தர்கள் பின்பற்றுவர். இத்தகைய கோவில்களில் கியாதப்பன கோவிலும் ஒன்றாகும். இங்கு முட்களே கோவிலாக கருதப்படுகிறது.
சித்ரதுர்கா, செல்லகெரேவின், புல்லரஹள்ளி கிராமத்தில் வசிக்கும், காடுகொல்லர் சமுதாயத்தினரின் குல தெய்வம் கியாதப்ப சுவாமி. இந்த கோவிலில் நடக்கும் வழிபாடுகளை கண்டால், மெய் சிலிர்க்கும். ஆண்டு தோறும் கோவிலில் திருவிழா நடக்கும். பொதுவாக திருவிழா என்றால், தீமிதி, சிறப்பு பூஜைகள், ஊர்வலம் நடக்கும். ஆனால் கியாதப்பன சுவாமி கோவில் திருவிழாவில் முட்களால் கோவில் அமைத்து, அதன் மீது கலசம் வைத்து பூஜிப்பர்.
கோவிலில் நேற்று முன்தினம், திருவிழா நடந்தது. பல வகையான முட்களை கொண்டு வந்து குவித்து கோவில் உருவாக்கினர். இவர்கள் உருவாக்கிய கோவில், 21 அடி உயரம் இருந்தது. முட்களால் கோவில் கட்டும் போது, யாரும் செருப்பு அணிவதில்லை.
வெறுங்காலுடன் முட்களை கொண்டு குவித்து கோவில் அமைத்தனர். கிராமத்தின் இருவர் செருப்பு அணியாமல் முட்கள் மீதேறி கலசம் பிரதிஷ்டை செய்தனர். ஐந்து நாட்கள் வரை, கலசம் முள் கோவிலில் இருக்கும். அதன்பின் அதை கீழே கொண்டு வரும் நிகழ்ச்சியும் கூட, கோலாகலமாக நடத்தப்படும்.
கூர்மையான முட்களை கைகளால் கொண்டு வரும் போதும், அதன் மீதேறி கலசம் பிரதிஷ்டை செய்யும் போதும், பக்தர்களுக்கு இதுவரை எந்த காயமோ, பாதிப்போ ஏற்பட்டதில்லையாம். இது கடவுளின் சக்தி என, கிராமத்தினர் நம்புகின்றனர். விசித்திரமான இந்த வழிபாடுகளை காண, ஆண்டுதோறும் சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.- நமது நிருபர் -

