மோடி படம் போட்ட சேலை பெங்களூரில் ஜோராக நடக்கும் விற்பனை
மோடி படம் போட்ட சேலை பெங்களூரில் ஜோராக நடக்கும் விற்பனை
ADDED : பிப் 10, 2024 11:36 PM

பெங்களூரு : பெங்களூரு சிக்பேட் ஜவுளிக் கடைகளில், பிரதமர் மோடி படம் கொண்ட துணிகள் விற்பனை ஜோராக நடக்கிறது.
லோக்சபா தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் மும்முரமாக தயாராகி வருகின்றனர். தேர்தலின் போது நடக்கும் பிரசாரத்துக்கு, கட்சி கொடிகள், துண்டுகள், தொப்பிகள், ஷர்ட்கள், சாவி கொத்து விற்பனையும் ஜோராக நடக்கும்.
இந்த வியாபாரத்தில் அனுபவம் கொண்ட சிலர் மட்டுமே ஈடுபடுவர். ஏனென்றால் சில அரசியல் வாதிகள் சரியாக பணம் தர மாட்டார்கள். பணம் பாக்கி வைத்து விட்டு, 'நான் யார் தெரியுமா' என்று மிரட்டிய சம்பவங்களும் நடந்துள்ளன.
மேலும், தேர்தலுக்கு தேர்தல் ஏதாவது புதிய வகையான பொருட்கள் அறிமுகப்படுத்தி, அரசியல்வாதிகளை ஈர்ப்பதும் காலம் காலமாக நடந்து வரும் வியாபார யுத்தி தான்.
இந்த வகையில், இந்த முறை லோக்சபா தேர்தலை ஒட்டி, பெங்களூரு சிக்பேட்டில் உள்ள ஜவுளி கடைகளுக்கு, பிரதமர் மோடி படம் கொண்ட துணிகள் விற்பனைக்கு வந்துள்ளன.
தலைப்பாகை அணிந்து மோடி கை அசைப்பது, தாமரை மீது இருக்கும் மோடி, கை அசைக்கும் மோடி என மூன்று வடிவமைப்புகளில் விற்பனைக்கு வந்துள்ளன. பெண்கள் சேலையாகவும்; ஆண்கள் சட்டை தைப்பதற்கும் வாங்கி செல்கின்றனர்.
பெங்களூரு மட்டுமின்றி, பெலகாவி, சித்ரதுர்கா, பல்லாரி, மைசூரு, ஷிவமொகா உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பா.ஜ., ஆதரவாளர்கள், தொண்டர்கள் இந்த துணிகளை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

