ADDED : மே 21, 2025 04:24 AM

புதுடில்லி: 'ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு அம்பலப்படுத்த, காங்., - எம்.பி., சசி தரூர், தி.மு.க., - எம்.பி., கனிமொழி உள்ளிட்ட ஏழு எம்.பி.,க்கள் தலைமையில், அனைத்து கட்சி எம்.பி.,க்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குழுவினர், விரைவில் பல்வேறு நாடுகளுக்கு செல்லஉள்ளனர்.
இந்நிலையில், வெளி நாடுகளுக்கு செல்லும் எம்.பி.,க்கள் குழுவினரை சந்தித்த மத்திய அரசு அதிகாரிகள், பாகிஸ்தானின் நேரடி மற்றும் மறைமுக பயங்கரவாத ஆதரவுக்கு உரிய ஆதாரங்கள், ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்நாட்டின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால், 40 ஆண்டுகளுக்கும் மேலாக, நம் நாட்டு மக்கள் அனுபவித்து வரும் துன்பங்கள், சந்தித்த பிரச்னைகள் குறித்த தகவல்களையும் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவல்கள் மற்றும் ஆதாரங்களை எல்லாம் தொகுத்து, வெளி நாடு செல்லும் எம்.பி., குழுக்களிடம், அதிகாரிகள் வழங்கி உள்ளனர்.
மேலும், சிந்து நதி நீர் விவகாரத்தில் நாடகமாடும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கவும் எம்.பி.,க்கள் குழுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.