ADDED : ஜன 27, 2024 12:19 AM
பெங்களூரு,- பெங்களூரின் போக்குவரத்து நெருக்கடி பிரச்னைக்கு தீர்வு காண, முந்தைய பட்ஜெட்டில் மாநகராட்சி அறிவித்த திட்டங்கள், வெறும் அறிவிப்போடு நின்றுள்ளன; செயல்பாட்டுக்கு வரவில்லை.
பெங்களூரு மாநகர மக்களை வாட்டி வதைக்கும் பிரச்னைகளில், வாகன போக்குவரத்து நெருக்கடியும் ஒன்று. இந்த பிரச்னைக்குத் தீர்வு காணும் நோக்கில், முந்தைய பட்ஜெட்டில் 700 கோடி ரூபாய் செலவிலான, பல திட்டங்களை பெங்களூரு மாநகராட்சி அறிவித்தது. ஆனால் இந்த திட்டங்கள் பட்ஜெட் புத்தகத்தில் தேங்கியுள்ளன.
வாகன போக்குவரத்து நெருக்கடியை குறைக்க, புதிய மேம்பாலம், கீழ் பாலம் கட்டுவதற்காக, 210 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஜே.சி.சாலை, கனகபுரா சாலை ஜங்ஷன் உட்பட, பல இடங்களில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என, கூறப்பட்டது. ஆனால் ஒரு பாலமும் கட்டவில்லை. திட்ட அறிக்கை கூட தயாராகவில்லை.
எந்த சாலையில், எந்த பாலம் கட்டுவது என்பது குறித்தும் மாநகராட்சி முடிவு செய்யவில்லை. புதிய மேம்பாலங்கள் கட்டாதது மட்டுமின்றி, ஏற்கனவே நடந்த மேம்பால கட்டுமான பணிகள், மாதக்கணக்கில் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே காரணத்தால் நகரின் பல இடங்களில், போக்குவரத்து நெருக்கடி அதிகரிக்கிறது.
நிலம் கையகப்படுத்துதல் தாமதமாவது, பெஸ்காம், குடிநீர் வாரிய பணிகள் உள்ளிட்ட காரணங்களால், மேம்பாலப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மற்றொரு பக்கம், நிதி பற்றாக்குறையும் முட்டுக்கட்டையாக உள்ளது. பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியும், அதை வழங்க அதிகாரிகளுக்கு மனமில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எலஹங்கா மேம்பாலம் கட்டும் பணிகளுக்கு, நிர்ணயித்த நேரத்தில் நிதி வழங்கவில்லை. பில் அனுப்பி மூன்று மாதங்களாகியும் நிதி வராததால், ஒப்பந்ததாரர் பணியை நிறுத்தியுள்ளார். பணி முடிய மேலும் ஒன்றரை ஆண்டு அவகாசம் கேட்டு, ஒப்பந்ததாரர் கடிதம் எழுதியுள்ளார்.
ராஜராஜேஸ்வரி நகர் ஆர்ச் அருகில் உள்ள மேம்பாலப் பணிகள், சட்டசபை தேர்தல் முடிந்த பின் நிறுத்தப்பட்டன. இங்கு நடமாட முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். ஈஜிபுரா மேம்பாலம் பணிகள் நிறுத்தப்பட்டு, இரண்டு ஆண்டுகள் ஆகின்றன.
அதன்பின் டெண்டர் அழைத்து, பணிகளை ஒப்படைத்து இரண்டு ஆண்டுகளாகியும் ஒப்பந்ததாரருக்கு, முன்பணம் கொடுக்கவில்லை. நிலம் கையகப்படுத்தவில்லை. இதனால் பணிகளை தொடர முடியவில்லை.
ஜங்ஷன்களை உலக தரத்துடன் அழகாக்கும் திட்டம், பட்ஜெட் தாக்கலுக்கு முன்பே துவங்கப்பட்டது. இதற்காக, 150 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் ஜங்ஷன்களை அழகாக்க டெண்டர் இன்னும் அழைக்கப்படவில்லை.
கியோஸ்க், ஓய்வறை, குடிநீர், மொபைல் சார்ஜிங் ஸ்டேஷன், படிக்கும் இட வசதி, குழந்தைகள் விளையாட்டு அரங்கம், ஹைடெக் கழிப்பறை, ஆட்டோ ரிக்ஷா பிக்கப் ஜோன், ஜீப்ரா கிராசிங், நடைபாதை சிக்னல் உட்பட, அனைத்து வசதிகள் கொண்ட 10 பிளாசாக்கள் கட்டும் திட்டம், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
சிவானந்த சதுக்கம் அருகில் ஒரு பிளாசாவை தவிர, மற்ற இடங்களில் பிளாசா கட்டப்படவில்லை. எப்போது கட்டப்படும் என்பதற்கு, அதிகாரிகளிடம் பதில் இல்லை.
மொத்தத்தில் முந்தைய பட்ஜெட்டில் மாநகராட்சி அறிவித்த திட்டங்கள் பெரும்பாலும் காகிதத்திலேயே அல்லது கணினியிலேயே நின்றுவிட்டன. அடுத்த பட்ஜெட் காலமும் நெருங்கிவிட்டது.

