ADDED : செப் 11, 2025 03:30 AM
புல் பிரஹலாத்பூர்: இரட்டை கொலை வழக்கில் 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை பீகாரில் டில்லி போலீசார் கைது செய்தனர்.
கடந்த 2012 ஜூலை 31ல், புல் பிரஹலாத்பூர் காவல் நிலையத்தில் ராம் குப்தா என்பவர் தன் லாரியுடன் அதன் ஓட்டுநர் ஷமிம் மற்றும் உதவியாளர் ஷேரா ஆகிய இருவரும் மாயமானதாக புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஹரியானாவின் பல்வாலில் ஓட்டுநர் ஷமிமின் உடலும் உத்தர பிரதேசத்தின் மதுராவில் ஷேராவின் உடலும் மீட்கப்பட்டன. பிரயாக்ராஜில் லாரி கண்டுபிடிக்கப்பட்டது.
ஓட்டுநர், உதவியாளரை கொன்று லாரியை கடத்தியதாக சுனில், சத்ருகன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த கடத்தல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட பீகார் மாநிலத்தின் மாதேபுராவைச் சேர்ந்த லாலன் குமார் என்ற லாலன்வா, 33, என்பவரை போலீசார் தேடி வந்தனர்.
கடந்த 2012 டிசம்பரில் அவரை தேடப்படும் குற்றவாளியாக டில்லி நீதிமன்றம் அறிவித்திருந்தது. அவரை பற்றி தகவல் தெரிவித்தால் 1 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த லாலன் குமாரை, மாதேபுராவின் சங்கர்பூர் பகுதியில் போலீசார் கைது செய்தனர். பீகாரில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, டில்லிக்கு கொண்டு வரப்பட்டார்.