எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்புக்கு மத்தியில் முத்தஹனுமேகவுடா காங்.,கில் ஐக்கியம்
எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்புக்கு மத்தியில் முத்தஹனுமேகவுடா காங்.,கில் ஐக்கியம்
ADDED : பிப் 24, 2024 04:36 AM

பெங்களூரு : துமகூரு மாவட்ட எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்புக்கு மத்தியில், பா.ஜ.,வில் இருந்து விலகி, முத்தஹனுமே கவுடா காங்கிரசில் இணைந்தார்.
கடந்த 2014 லோக்சபா தேர்தலில், துமகூரு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, முத்தஹனுமே கவுடா வெற்றி பெற்று எம்.பி., ஆனார். கடந்த 2019 தேர்தலிலும் 'சீட்' எதிர்பார்த்தார்.
ஆனால் அப்போது காங்கிரசுடன் கூட்டணியில் இருந்த, ம.ஜ.த.,வுக்கு துமகூரு தொகுதி ஒதுக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த முத்தஹனுமே கவுடா, காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தார்.
ஆனால் அங்கும் அவருக்கு 'சீட்' கிடைக்கவில்லை. ஆனாலும் வேறு வழியின்றி கட்சியில் நீடித்தார். வரும் லோக்சபா தேர்தலிலும், துமகூரு 'சீட்' எதிர்பார்த்தார். ஆனால் முன்னாள் அமைச்சர் சோமண்ணாவுக்கு, பா.ஜ.,வில் சீட் ஏறக்குறைய உறுதியாகி உள்ளது. இதனால் மீண்டும் காங்கிரசில் இணைய விரும்பிய, முத்தஹனுமேகவுடா, துமகூரு மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள் ராஜண்ணா, பரமேஸ்வருடன் தொடர்பில் இருந்தார்.
அவர்கள் இருவரும் முத்தஹனுமே கவுடாவை காங்கிரசுக்கு அழைத்து வந்து, துமகூரில் போட்டியிட வைக்க விரும்பினர். ஆனால், இதற்கு துமகூரு மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஜெயசந்திரா, ரங்கநாத் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
துணை முதல்வர் சிவகுமாருக்கும், முத்தஹனுமே கவுடாவை காங்கிரசில் சேர்ப்பது பிடிக்கவில்லை.
ஆனாலும் முதல்வர் சித்தராமையாவிடம் பேசி, முத்தஹனுமே கவுடாவை காங்கிரசில் இணைக்க, அமைச்சர்கள் பரமேஸ்வர், ராஜண்ணா சம்மதம் பெற்றனர். அதன்படி நேற்று முன்தினம் பெங்களூரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் பரமேஸ்வர், ராஜண்ணா முன்னிலையில், முத்தஹனுமே கவுடா காங்கிரசில் இணைந்தார்.