ADDED : ஜூன் 27, 2025 01:08 AM

ஜெய்ப்பூர்: 'ஆப்பரேஷன் சிந்துார்' ராணுவ ரகசியங்களை, பாகிஸ்தான் பெண்ணுடன் பகிர்ந்த நம் கடற்படை ஊழியர் கைது செய்யப்பட்டார்.
நம் ராணுவத்தின் போர் தந்திரங்களை பாகிஸ்தான் உளவுத்துறை மிக சாதுர்யமாக உளவு பார்த்து ரகசியங்களை பெறுவதாக, இந்திய புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல் கிடைத்தது.
'ஆப்பரேஷன் சிந்துார்'
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நம் ஆயுதப்படையினர், 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை வாயிலக, மே 7ல் பாகிஸ்தானில் புகுந்து பயங்கரவாத முகாம்களை அழித்தனர்.
இந்த ஆப்பரேஷன் குறித்த தகவல்களை முன்கூட்டியே பாகிஸ்தான் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து சமூக வலைதளங்களை நம் புலனாய்வு அமைப்பினர் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது, டில்லி கடற்படை தலைமையகத்தில் குமாஸ்தாவாக பணியாற்றும் விஷால் யாதவ் என்பவர், ஆப்பரேஷன் சிந்துார் குறித்த தகவலை பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணுக்கு கசியவிட்டது தெரியவந்தது.
இதையடுத்து விஷாலை, ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் சி.ஐ.டி., பாதுகாப்பு பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.
விசாரணை நடத்திய போலீஸ் ஐ.ஜி., விஷ்ணுகாந்த் குப்தா கூறியதாவது:
ஹரியானா மாநிலம் ரேவரியை சேர்ந்தவர் விஷால்.
டில்லி கடற்படையில் பணியாற்றும் இவருடன் பிரியா சர்மா என்ற பெயரில் பாகிஸ்தான் பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் நட்பாக பழகினார்.
இதையடுத்து அவருக்கு பண ஆசை காட்டி, நம் ராணுவம் குறித்த தகவல்களை அந்த பெண் பெற்றுள்ளார்.
சூதாட்டம்
ஆப்பரேஷன் சிந்துார் குறித்த தகவலை பெறுவதற்காக விஷாலுக்கு அவர் 50,000 ரூபாய் அளித்துள்ளார். நம் ராணுவ ரகசியங்களை தருவதற்காக விஷால் மொத்தம் 2 லட்சம் ரூபாயை பெற்றுள்ளார்.
'ஆன்லைன்' சூதாட்டத்தில் அதிக ஆர்வம் உடைய அவர், பணத்துக்காக நம் ராணுவ ரகசியங்களை, 'வாட்ஸாப்' மற்றும் 'டெலிகிராம்' செயலியில் பிரியா சர்மாவுக்கு பகிர்ந்துள்ளார்.
இதற்கான பணத்தை கிரிப்டோகரன்சி முறையில் பெற்றது தெரியவந்தது. விசாரணையில், பிரியா சர்மா என்ற போலி ஐ.டி.,யில் விஷாலுடன் பழகியவர் பாகிஸ்தான் உளவாளி பெண் என தெரியவந்தது. இதையடுத்து விஷாலின் மொபைல்போனை கைப்பற்றி விசாரிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.