ஒடிசாவை புரட்டி போடும் கனமழை; இடி, மின்னல் தாக்கியதில் 10 பேர் பலி
ஒடிசாவை புரட்டி போடும் கனமழை; இடி, மின்னல் தாக்கியதில் 10 பேர் பலி
ADDED : மே 17, 2025 10:17 AM

புவனேஸ்வர்: ஒடிசாவில் பெய்த கனமழை,இடி, மின்னலுக்கு 6 பெண்கள் உள்பட 10 பேர் பலியாகி உள்ளனர்.
ஒடிசா மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கட்டாக், பாலசோர், கோராபுட், கோர்த்தா, கஞ்சம் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை கொட்டி வருகிறது. சில பகுதிகளில் ஆலங்கட்டி மழையும் பதிவானது.
கோராபுட் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. அதில் 3 பேர் பலியாகினர். இவர்கள் அனைவரும் அருகில் உள்ள வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த போது மழை பெய்தது. ஒதுங்குவதற்காக அங்குள்ள குடிசையில் அவர்கள் புகுந்தனர். அப்போது மின்னல் தாக்கவே 3 பேரும் உயிரிழந்தனர்.
அதேபோல், கஜபதி, தேன்கனல், கஞ்சம் உள்ளிட்ட மாவட்டங்களில் 7 பேர் பலியாகினர். இவர்களில் 2 பேர் சிறுவர்கள். வீட்டின் வராண்டாவில் விளையாடிக் கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தனர்.
இதுபோன்ற இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டும் போது பாதுகாப்பான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும், வீடுகளில் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.