ரெய்டுக்கு வந்த அதிகாரிகள்... ஜன்னல் வழியே பணக்கட்டுகளை தூக்கி வீசிய அரசு இன்ஜினியர்
ரெய்டுக்கு வந்த அதிகாரிகள்... ஜன்னல் வழியே பணக்கட்டுகளை தூக்கி வீசிய அரசு இன்ஜினியர்
UPDATED : மே 30, 2025 03:18 PM
ADDED : மே 30, 2025 02:37 PM

புவனேஸ்வர்: ஒடிசாவில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனைக்கு வருவதை அறிந்து, ரூபாய் நோட்டுகளை ஜன்னல் வழியாக வீசிய அரசு தலைமை இன்ஜினியரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புவனேஸ்வரில் ஊரக வளர்ச்சிப் பணிகள் துறையின் இன்ஜினியராக பணியாற்றி வருபவர் பைகுந்த் நாத் சாரங்கி. இவரது வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீரென சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் ஒரு பகுதியாக, புவனேஸ்வரில் உள்ள வீட்டில் அதிகாரிகள் வருவதை அறிந்த சாரங்கி, டக்கென ரூ.500 பணக்கட்டுகளை ஜன்னல் வழியில் தூக்கி எறிந்துள்ளார். இதனைக் கண்ட அதிகாரிகள் அந்தப் பணத்தை பறிமுதல் செய்தனர்.
பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் ரூ.2.1 கோடியை பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.