ADDED : ஜன 27, 2024 12:46 AM

புதுடில்லி: பத்திரிகையாளர்கள் இருவருக்கு மத்திய அரசு, 'பத்ம பூஷண்' விருது அறிவித்துள்ளது.
பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை, மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. அதன்படி, ஐந்து பேருக்கு பத்ம விபூஷண்; 17 பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 110 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில், 'மும்பை சமாச்சார்' பத்திரிகையின் இயக்குனர் ஹோர்முஸ்ஜி என் காமா, 'ஜென்மபூமி' பத்திரிகை ஆசிரியர் குந்தன் வியாஸ் ஆகியோருக்கு, பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பத்திரிகை துறையில் சிறப்பாக பங்காற்றியதற்காக இவர்களுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.பி.சி., எனப்படும், 'ஆடிட் பீரோ சர்குலேஷன்' அமைப்பின் தலைவராக, 2018 - 19ல், ஹோர்முஸ்ஜி என் காமா பதவி வகித்துள்ளார். மேலும் இவர், ஐ.என்.எஸ்., எனப்படும் இந்திய செய்தித்தாள் சங்கம், பி.டி.ஐ., எனப்படும் பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா, எம்.ஆர்.யு.சி., எனப்படும் மீடியா ரிசர்ச் யூசர்ஸ் கவுன்சிலின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
குஜராத்தைச் சேர்ந்த ஜென்ம பூமி பத்திரிகையின் ஆசிரியரான குந்தன் வியாஸ், ஐ.என்.எஸ்., தலைவராகவும் பதவி வகித்துள்ளார். பத்திரிகையாளர் இருவருக்கு பத்ம விருது வழங்கப்படுவது இதுவே முதன்முறை.

