பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்கள் பாக்., பயங்கரவாதிகள் ! :என்.ஐ.ஏ., நடத்திய விசாரணையில் உறுதி
பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்கள் பாக்., பயங்கரவாதிகள் ! :என்.ஐ.ஏ., நடத்திய விசாரணையில் உறுதி
ADDED : ஜூன் 23, 2025 03:03 AM

புதுடில்லி: பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர் - இ - தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் என்பது என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் உறுதியாகியுள்ளது. பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், 'மினி சுவிட்சர்லாந்து' என அழைக்கப்படும் பைசரன் பள்ளத்தாக்கு உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இப்பகுதி, சுற்றுலா பயணியரின் விருப்பமான தலங்களில் ஒன்றாகும்.
கடந்த ஏப்., 22ம் தேதி வழக்கம் போல், சுற்றுலா பயணியர் குவிந்து உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது, அங்கிருந்த மலைப்பகுதி வழியாக வந்த பயங்கரவாதிகள் சிலர், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
குறிப்பாக, தம்பதியரை நெருங்கி, அவர்களின் மதம் குறித்து கேள்வி எழுப்பி கணவர்களை மட்டும் சுட்டுக் கொன்றனர்.
தேடுதல் வேட்டை
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவிக்கும்படி கூறி, அவர்கள் தப்பிச் சென்றனர். இந்த கொடூர தாக்குதலில், சுற்றுலா பயணியர் 25 பேர் மற்றும் உள்ளூர் வழிகாட்டி ஒருவர் என 26 பேர் பலியாகினர்.
இந்த தாக்குதலுக்கு, நம் அண்டை நாடான பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற தடை செய்யப்பட்ட லஷ்கர் - இ - தொய்பாவின் கிளை அமைப்பான 'தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்' என்ற அமைப்பு பொறுப்பேற்றது.
இதையடுத்து, ஜம்மு - காஷ்மீர் முழுதும் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அதேசமயம், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, கடந்த மே 7ம் தேதி, பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை, 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில், வான்வழி தாக்குதல்கள் வழியாக நம் நாட்டு ராணுவம் அழித்தது.
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய பஹல்காம் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
தீவிர விசாரணை
இதையடுத்து, வழக்குப் பதிவு செய்து அதிகாரிகள் விசாரணையை துவங்கினர். சம்பவம் நடந்த பகுதியிலும், சுற்றியுள்ள கிராமங்களிலும் பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
தாக்குதல்களில் இறந்தவர்களின் குடும்பத்தினர், சம்பவ இடத்தில் இருந்தவர்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதன் முடிவில், பஹல்காம் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து உதவியதாக, பஹல்காமின் பட்கோலே பகுதியைச் சேர்ந்த பர்வேஸ் அஹமது மற்றும் ஹில்பார்க் பகுதியை சேர்ந்த பஷீர் அஹமது ஜோதார் ஆகிய இருவரையும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்டது பாகிஸ்தானின் லஷ்கர் - இ - தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவும், அடைக்கலமும் அளிப்பதாக மத்திய அரசு குற்றஞ்சாட்டி வரும் நிலையில், அந்நாட்டில் இருந்து வந்த லஷ்கர் - இ - தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் பஹல்காம் தாக்குதலை நடத்தியது உறுதியாகி உள்ளது.