பாக்., பயங்கரவாத நடவடிக்கை: நிதி ஆதாரத்தை தடுக்க தீவிரம்
பாக்., பயங்கரவாத நடவடிக்கை: நிதி ஆதாரத்தை தடுக்க தீவிரம்
ADDED : ஜூன் 23, 2025 12:17 AM

புதுடில்லி: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகளை, சர்வதேச அமைப்பான நிதி நடவடிக்கை பணிக்குழு மீண்டும் தோலுரித்து காட்டியுள்ளது. இதைத்தொடர்ந்து, பாகிஸ்தானின் நிதி ஆதாரங்களை தடுக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
சட்டவிரோத பணப்புழக்கம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி அளிப்பதை தடுக்க, சர்வதேச நாடுகளுக்கு இடையே எப்.ஏ.டி.எப்., எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழு என்ற அமைப்பு இயங்கி வருகிறது.
இந்த அமைப்பு வெளியிடும் கருப்பு பட்டியலில் இடம்பெறும் நாடுகள், உலக வங்கி உட்பட சர்வதேச அமைப்புகளிடம் இருந்து நிதியுதவி பெறுவதை தடை செய்யும்.
ஜம்மு - காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு இந்த அமைப்பு கண்டனம் தெரிவித்தது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், 'பாகிஸ்தானின் ஆதரவின்றி இச்செயலை பயங்கரவாதிகள் அரங்கேற்றி இருக்கமாட்டார்கள்' என, குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில், நிதி நடவடிக்கை பணிக்குழு சமீபத்தில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதில், 'கடந்த 2020ல், இந்திய கடற்பரப்பில் அத்துமீறி சென்ற கப்பலை இந்திய கடற்படையினர் மடக்கி பிடித்து சோதனையிட்டனர். இதில், ஏவுகணைகளை தயாரிக்கும் உபகரணங்கள் இருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.
'இக்கப்பல், பாகிஸ்தானுக்கு செல்ல இருப்பதையும் கண்டறிந்தனர். இது, சர்வதேச சட்டங்களை மீறும் செயல்' என, குறிப்பிட்டுள்ளது.
பாகிஸ்தான், எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதாக, இந்தியா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில், நிதி நடவடிக்கை பணிக்குழுவின் அடுத்தடுத்த அறிக்கைகளால், பாகிஸ்தானுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் சர்வதேச நிதி ஆதாரங்களுக்கு தடைவிதிக்கும் நோக்கில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
இதற்காக, பயங்கரவாதிகளை ஊக்குவித்து, அதற்கு நிதியுதவி அளிக்கும் பாகிஸ்தானின் செயல்பாடுகளை, தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சமிட்டு காட்ட, மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.