''பொருளாதார பிரச்னைகளில் பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும்'': கார்கே வலியுறுத்தல்
''பொருளாதார பிரச்னைகளில் பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும்'': கார்கே வலியுறுத்தல்
ADDED : ஜூலை 12, 2024 03:00 PM

புதுடில்லி:
நாட்டின் அடிப்படை பொருளாதார பிரச்னைகளில் பிரதமர் மோடி கவனம் செலுத்த
வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
'எக்ஸ்'
வலைதளத்தில் கார்கே பதிவிட்டதாவது: நரேந்திர மோடி அரசு,
வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், சமத்துவமின்மை போன்றவற்றால் கோடிக்கணக்கான
மக்களை குழிக்குள் தள்ளியது. வேலையின்மை விகிதம் 9.2 சதவீதமாக இருப்பதால்,
இளைஞர்களின் எதிர்காலம் பயனற்றதாக இருக்கிறது. 20 முதல் 24 வயதுடையவர்களின்
வேலையின்மை விகிதம் 40 சதவீதமாக உயர்ந்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களின்
பெரும்பாலான அரசு பங்குகள் விற்கப்பட்டுள்ளன. இதனால் 7 பொதுத்துறை
நிறுவனங்களில் இருந்து மட்டும் 3.84 லட்சம் பேர் அரசு வேலைகளை
இழந்துள்ளனர்.
சேமிப்பு
பணவீக்கம் உச்சத்தில் உள்ளது. மாவு,
பருப்பு, அரிசி, பால், சீனி, உருளைக்கிழங்கு, தக்காளி, வெங்காயம் மற்றும்
அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு
உயர்ந்து வருகிறது. இதன் விளைவாக குடும்பங்களின் சேமிப்பு 50 ஆண்டுகளில்
இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு
பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கிறது. கிராமப்புறங்களில் வேலையின்மை
கணிசமாக அதிகரித்துள்ளது. அங்கு, மே மாதத்தில் 6.3 சதவீதமாக இருந்த
வேலையின்மை தற்போது 9.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பொருளாதார பிரச்னை
100
நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் சராசரி வேலை நாட்களின்
எண்ணிக்கை குறைந்துள்ளது. மோடி அவர்களே, நீங்கள் ஆட்சிக்கு வந்து 10
ஆண்டுகள் ஆகிவிட்டன. உங்கள் தொடர்புகளை பயன்படுத்தி மக்களின் பிரச்னைகளை
கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டீர்கள். ஆனால் ஜூன் 2024க்கு பிறகு
அப்படியிருக்க முடியாது. நாட்டின் அடிப்படை பொருளாதார பிரச்னைகளில்
பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தை
தன்னிச்சையாக சீர்குலைப்பது நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர்
பதிவிட்டுள்ளார்.