மைசூரில் திருட்டு, விபத்துகள் தடுக்க 250 கேமரா பொருத்த போலீஸ் திட்டம்
மைசூரில் திருட்டு, விபத்துகள் தடுக்க 250 கேமரா பொருத்த போலீஸ் திட்டம்
ADDED : ஜன 10, 2024 12:13 AM

மைசூரு : மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள், நெடுஞ்சாலைகள், முக்கிய சந்திப்புகளில் 250 புதிய உயர் தொழில்நுட்ப கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த, மைசூரு நகர போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.
கர்நாடகத்தில் பெங்களூரை தவிர, வேகமாக வளர்ந்து வளரும் நகரங்களில் மைசூரும் ஒன்று. நகரம் வளர வளர, மக்கள் தொகையும் அதிகரிக்கிறது. வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.
அத்துடன் குற்ற வழக்குகள், சாலை விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த, மைசூரு நகர நெடுஞ்சாலை உட்பட முக்கிய சாலைகள், மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளில், 250 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நகர போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.
போக்குவரத்து விதிமீறல் வழக்குகள், குற்ற வழக்குகள் கண்டறிய உதவியாக இருக்கும். இதன் மூலம் குற்றங்கள், போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் சாலை விபத்துகளை திறம்பட கட்டுப்படுத்த முடியும்.
மைசூரு நகரில் ஏற்கவே 108 கண்காணிப்பு கேமராக்கள் செயல்பட்டு வருவதால், போக்குவரத்து நெரிசல் காரணமாக, கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், 4.3 கோடி ரூபாய் செலவில், 250 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க, நகர போலீஸ் கமிஷனர் ரமேஷ், அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.
நகரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மாநில அரசு 4.3 கோடி ரூபாய் மானியம் வழங்கி, போலீஸ் கமிஷனரின் கோரிக்கையை ஏற்று, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிக்கு தற்போது டெண்டர் விடப்பட்டு உள்ளது.
நகரை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. மைசூரு - பெங்களூரு சாலை, ஹூன்சூர் சாலை, மஹாதேவ்பூர் சாலை, நரசிப்பூர் சாலை, பன்னுார் சாலை, நஞ்சன்கூடு சாலை, மானந்தவாடி சாலை ஆகியவை நகரை இணைக்கிறது.
இந்த சாலைகளில் போலீஸ் ஆய்வு பணி முடியாததால், இந்த சாலைகளில் சிறப்பு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்துள்ளனர்.
அதிவேகம், நெடுஞ்சாலைகளில் சிக்னல் தாண்டுதல் உட்பட பல போக்குவரத்து விதிமீறல் வழக்குகளை கண்டறிந்து, அபராதம் விதிக்க இந்த கேமராக்கள் உதவியாக இருக்கும்.
நகர போலீஸ் கமிஷனர் ரமேஷ் கூறியதாவது:
மைசூரு நகரில் போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிவதோடு, குற்றங்களை கண்டறிவதற்காக, 250 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் நிறுவ, அரசிடம் கோரிக்கை சமர்ப்பித்து உள்ளோம்.
அரசும் நல்ல பதில் அளித்து, நிதியும் வெளியிட்டு உள்ளது. தற்போது, இந்த கண்காணிப்பு கேமராக்கள் நகரின் முக்கிய சாலைகள், மக்கள் வசிக்கும் பகுதிகளில் பொருத்தப்பட்டு வருகின்றன.
இதனுடன், நகரின் பாதுகாப்புக்காக நகரை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைகளில் நவீன தொழில்நுட்ப கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

