பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜூன் 10ம் தேதி வரை போலீஸ் காவல்
பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜூன் 10ம் தேதி வரை போலீஸ் காவல்
ADDED : ஜூன் 06, 2024 05:19 PM

பெங்களூரு: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ம.ஜ.த., முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு, ஜூன் 10ம் தேதி வரை போலீஸ் காவலை நீட்டித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கர்நாடகாவில், பிரதான எதிர்க்கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவரான முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா,33. இவர், சில பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்ததாகவும், ஏராளமான ஆபாச வீடியோக்கள் வைத்து இருந்ததாகவும் கடந்த மாதம் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில், அவர் மீது 3 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இவ்வழக்கை எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. பிரஜ்வல் ரேவண்ணாவின் போலீஸ் காவல் இன்றுடன் நிறைவடைந்தது. இதனால் அவரை நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 06) சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆஜர்படுத்தினர். விசாரிப்பதற்காக, காவலை மேலும் 5 நாட்கள் நீட்டிக்குமாறு சிறப்பு புலனாய்வு குழு கோரிக்கை விடுத்தது.
இதையடுத்து, பிரஜ்வல் ரேவண்ணாவை, ஜூன் 10ம் தேதி வரை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவுக்கு பெங்களூரு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.