ADDED : ஜன 27, 2024 12:11 AM

பெலகாவி -“பா.ஜ.வில் சேரும்படி எனக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது,” என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., லட்சுமண் சவதி கூறியுள்ளார்.
காங்கிரசில் இருந்து விலகி, ஜெகதீஷ் ஷெட்டர், பா.ஜ.,வில் நேற்று முன்தினம் இணைந்தார். இதையடுத்து பா.ஜ.,வில் இருந்து காங்கிரசுக்கு வந்து, அதானி தொகுதி எம்.எல்.ஏ., ஆன லட்சுமண் சவதியும், மீண்டும் பா.ஜ.,வுக்கு செல்வார் என, பேச்சு அடிபடுகிறது.
இதுகுறித்து அதானியில் லட்சுமண் சவதி நேற்று அளித்த பேட்டி:
மீண்டும் பா.ஜ.,வுக்கு வரும்படி, எனக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. நீங்கள் பா.ஜ.,வின் மகன், கசப்பான சம்பவங்களை மறந்துவிட வேண்டுமென, என்னிடம் பேசுபவர்கள் சொல்கின்றனர்.
ஆனால் எந்த அழுத்தம் வந்தாலும், என் கருத்தில் மாற்றம் இல்லை. நான் பா.ஜ.,வுக்குச் செல்ல மாட்டேன்.
யார் எனக்கு அழுத்தம் தருகின்றனர் என்றும், பொது இடத்தில் சொல்ல மாட்டேன்.
கை சின்னத்தில் போட்டியிட்ட என்னை, அதானி மக்கள் ஆதரித்துள்ளனர். 80,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்துஉள்ளனர்.
இதனால் காங்கிரசில் தொடருவேன். ஷெட்டர் சென்றதால், லட்சுமண் சவதியும் செல்வார் என்று, விவாதம் நடப்பது இயல்பு தான்.
நானும், அவரும் ஒன்றாக காங்கிரசுக்கு வரவில்லை. நான் தான் முதலில் வந்தேன். அதன்பின் அவர் வந்தார். அவர் ஏன் காங்கிரசுக்கு வந்தார், ஏன் சென்றார் என்று, எனக்கு தெரியாது. அவர் தான் சொல்ல வேண்டும்.
இந்த நேரத்தில் எனக்கு அமைச்சர் பதவி குறித்து, விவாதிப்பது சரியல்ல. பெலகாவி அரசியலில், நான் புறக்கணிக்கப்படவில்லை. முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், என்னை மரியாதையாக நடத்துகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

