டில்லி அணிவகுப்பில் திட்டமிட்டே புறக்கணிப்பு மத்திய அரசு மீது பஞ்சாப் முதல்வர் குற்றச்சாட்டு
டில்லி அணிவகுப்பில் திட்டமிட்டே புறக்கணிப்பு மத்திய அரசு மீது பஞ்சாப் முதல்வர் குற்றச்சாட்டு
ADDED : ஜன 27, 2024 01:27 AM

லூதியானா:“நாட்டு விடுதலைக்காக பஞ்சாபை சேர்ந்த ஏராளமானோர் உயிர் தியாகம் செய்துள்ளனர். சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியில் இருந்ததும் பஞ்சாபியர்தான்.
''ஆனால், தலைநகர் டில்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பு ஊர்வலத்தில் பஞ்சாப் மாநிலத்தை, மத்திய அரசு திட்டமிட்டே புறக்கணித்து விட்டது,” என, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டின் 75வது குடியரசு தினம் நாடு முழுதும் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
முன்னணி
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடந்த குடியரசு தின விழாவில், அம்மாநில முதல்வர் பகவந்த் மான் பேசியதாவது:
தலைநகர் டில்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பு ஊர்வலத்தில், பஞ்சாப் மாநிலத்தை மத்திய அரசு திட்டமிட்டே புறக்கணித்து விட்டது. நாட்டு விடுதலைக்காக பஞ்சாபை சேர்ந்த ஏராளமானோர் உயிர் தியாகம் செய்துள்ளனர். சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியில் இருந்ததும் பஞ்சாபியர்தான்.
ஆனால், மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் மாநில அரசின் அணிவகுப்பு ஊர்வலத்தில் சேர்க்கப்பட்டு விட்டன. பஞ்சாப் மிகவும் விசுவாசமான மாநிலம். ஆனால், இந்த விசுவாசத்தை நம்பாத சூழ்நிலையை உருவாக்க மத்திய அரசு திட்டமிடுகிறது.
பஞ்சாப் மாநிலத்தின் அலங்கார ஊர்தியில் சுதந்திரப் போராட்ட வீரர்கள், வளமான கலாசாரம், பஞ்சாபின் வீரம் மிக்க மாவீரர்களின் தியாகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதுபோன்ற தியாகிகள் இல்லாத குடியரசு தினத்தை மத்திய அரசு எப்படி கொண்டாடுகிறது? நாட்டின் உணவுத் தேவையை பஞ்சாப் மாநிலம்தான் பூர்த்தி செய்கிறது. நம் அண்டை நாடான பாகிஸ்தானுடன் 553 கி.மீ., துாரத்தை பஞ்சாப் கொண்டுள்ளது.
ஆளில்லா விமானம் வாயிலாக போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து வந்துகொண்டே இருக்கின்றன. அவற்றை முறியடிக்க பஞ்சாப் மாநிலம் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.
அடுத்த தலைமுறை
ஜம்மு - காஷ்மீரில் பஞ்சாபை சேர்ந்த அக்னிவீர் அம்ரித்பால் சிங்குக்கு ராணுவ மரியாதை வழங்காமல் மத்திய அரசு புறக்கணித்தது. பெண்களுக்கு அதிகாரம் அளிக்க பஞ்சாப் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு சரியான நேரத்தில் உதவி வழங்க சாலை பாதுகாப்புப் படை இன்று துவக்கப்படும்.
லுாதியானாவின் ஹல்வாராவில் இந்திய விமானப்படை நிலையத்தில் அமைக்கப்பட உள்ள விமான நிலையத்துக்கு 'ஷாஹீத் கர்தார் சிங் சரபா' சர்வதேச விமான நிலையம் என்று பெயரிடப்படும்.
அடுத்த தேர்தலைப் பற்றி ஆம் ஆத்மி கட்சி கவலைப்படவில்லை. அடுத்த தலைமுறை நலனுக்காகத்தான் கட்சி பாடுபடுகிறது. மதச்சார்பின்மைக்கு உதாரணமாக பஞ்சாப் திகழ்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

