லூதியானா மேற்கு தொகுதி யாருக்கு” ஓட்டு எண்ணிக்கை 8 மணிக்கு துவக்கம்
லூதியானா மேற்கு தொகுதி யாருக்கு” ஓட்டு எண்ணிக்கை 8 மணிக்கு துவக்கம்
ADDED : ஜூன் 22, 2025 09:01 PM
லூதியானா:'பணிவு மற்றும் ஆணவத்துக்கு இடையேயான போர்' என முதல்வர் பகவந்த் மான் வர்ணித்திருந்த, பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது.
பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,வாக இருந்த, குர்பிரீத் பாஸி கோகி, ஜனவரி மாதம் மரணம் அடைந்தார். இதையடுத்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, 19ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. மொத்தம் உள்ள 1,75,469 வாக்காளர்களில் 85,371 பேர் பெண்கள், 10 திருநங்கையர். இதில், 51.33 சதவீதம் பேர் ஓட்டுப் போட்டிருந்தனர். இதுவே, 2022ம் நடந்த சட்டசபைத் தேர்தலில், 64 சதவீதமாக இருந்தது. ஓட்டு எண்ணப்படும் கல்சா மகளிர் கல்லூரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி சார்பில், ராஜ்யசபா எம்.பி.,யும் தொழிலதிபருமான லூதியானாவைச் சேர்ந்த சஞ்சீவ் அரோரா,61, காங்கிரஸ் கட்சி சார்பில், பாரத் பூஷண் ஆஷு, 51, பா.ஜ., சார்பில், ஜீவன் குப்தா, சிரோமணி அகாலி தளம் சார்பில், வழக்கறிஞர் பரூப்கர் சிங் குமான் உட்பட, 14 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். ஆத்மி மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவிய சூழ்நிலையில், ஓட்டு எண்ணிக்கை இன்று காலை, 8:00 மணிக்குத் துவங்குகிறது.
ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு இந்த இடைத்தேர்தல் கடும் சோதனையாகக் கருதப்படுகிறது. இதில் கிடைக்கும் வெற்றியை வைத்தே, பஞ்சாபில் அக்கட்சி தன் பிடியைத் தக்க வைத்துக் கொள்ளுமா என்பதை முடிவு செய்ய முடியும் என அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி, லூதியானா மேற்கு தொகுதியில், ஆறு முறை தொடர்ந்து வெற்றி பெற்றிருந்தது. கடந்த, 2022ல் நடந்த தேர்தலில்தான் காங்., வேட்பாளர் ஆஷூ, ஆம் ஆத்மி வேட்பாளர் கோகியிடம் தோல்வி அடைந்தார். எனவேதா, காங்கிரஸ் கட்சி இடைத்தேர்தலிலும் ஆஷுவையே களம் இறக்கியுள்ளது. ஆனால், கடந்த ஆண்டு நவம்பரில், நான்கு தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல்களில் மூன்று தொகுதிகலை ஆம் ஆத்மி தக்கவைத்துக் கொண்டது. ஆனால், லோக்சபா தேர்தலில் மொத்தம் உள்ள, 13 தொகுதிகளில், மூன்று இடங்கள் மட்டுமே ஆம் ஆத்மிக்கு கிடைத்தது.
ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவினாலும், நகர்ப்புற வாக்காளர்களிடையே பா.ஜ.,வுக்கு ஏற்பட்டுள்ள செல்வாக்கு, தொடர்ச்சியான தோல்விகளுக்குப் பின், உயிர்த்தெழுந்துள்ள சிரோமணி அகாலி தளம் ஆகிய கட்சிகளும் களத்தில் தீவிர பிரசாரம் செய்திருப்பதால், மக்களிடம் தங்களுக்கு உள்ள செல்வாக்கை உணர, நான்கு கட்சிகளுமே ஆவலுடன் காத்திருக்கின்றன.
இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, இந்த தேர்தல் பணிவு மற்றும் ஆணவத்துக்கு இடையேயான போர் எனக் கூறிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், காங்கிரஸ் வேட்பாளர் ஆஷூ ஆணவம் நிறைந்தவர் என குற்றம் சாட்டியிருந்தார்.
மொத்தம், 117 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட பஞ்சாப் சட்டசபையில் தற்போது, ஆம் ஆத்மி கட்சி - 93, காங்கிரஸ் - 16, சிரோமணி அகாலி தளம் - 3, பா.ஜ., - 2 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சை தலா 1 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.