எத்தனை விமானங்களை பாக்., வீழ்த்தியது ராகுல் கேள்வி
எத்தனை விமானங்களை பாக்., வீழ்த்தியது ராகுல் கேள்வி
ADDED : மே 20, 2025 04:57 AM

நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் பேட்டி என்ற பெயரில் வெளியான வீடியோவில், 'ஆப்பரேஷன் சிந்துார் துவக்க நிலையில், பாக்.,குக்கு ஒரு செய்தியை தெளிவாக சொன்னோம். ராணுவத்தை தாக்கவில்லை; பயங்கரவாத கட்டமைப்புகளையே தாக்குவோம் என்றும், ராணுவம் தலையிட வேண்டாம் என்றும் கூறினோம். அதை பாக்., ஏற்கவில்லை' என கூறியிருந்தார்.
இந்த வீடியோவை சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்ட ராகுல், 'தாக்குதலுக்கு முன்பே, பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவித்தது குற்றம்' என கூறியிருந்தார்.
இந்நிலையில், அதே வீடியோவை தன் சமூக வலைதளத்தில், ராகுல் நேற்று மீண்டும் பதிவிட்டு, மறுபடியும் கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், 'வெளியுறவு அமைச்சரின் மவுனம் மிகவும் மோசமானது; சாபக்கேடானது. எனவே, மீண்டும் கேட்கிறேன். பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தெரிந்ததால், எத்தனை விமானங்களை இந்தியா இழந்தது? இதை வெறும் தவறு என கூற முடியாது; இது ஒரு குற்றம். இந்த தேசத்துக்கு உண்மை தெரிய வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.
- நமது டில்லி நிருபர் -