தட்கல் டிக்கெட்டுக்கு ஆதார் கட்டாயம் மோசடியை தடுக்க ரயில்வே புது முடிவு
தட்கல் டிக்கெட்டுக்கு ஆதார் கட்டாயம் மோசடியை தடுக்க ரயில்வே புது முடிவு
ADDED : ஜூன் 05, 2025 11:54 PM

புதுடில்லி, ஜூன் 6-
'ஆதார்' அடிப்படையில், 'தட்கல்' டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறையை ரயில்வே வாரியம் அறிமுகப்படுத்த உள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்தியன் ரயில்வே உணவு சுற்றுலா கழகத்தின் இணையதளத்தில், ரயில் டிக்கெட்டுகளை பயணியர் முன்பதிவு செய்து வருகின்றனர்.
பிரச்னை
பயணத்துக்கு, ஒருநாள் முன்பு டிக்கெட் எடுக்கும் முறை, 'தட்கல்' எனப்படுகிறது.
பெரும்பாலும், இந்த தட்கல் டிக்கெட் கிடைப்பது மிகவும் அரிது. ஆனால், பயண ஏஜன்ட்டுகளுக்கு மட்டும் எளிதாகக் கிடைக்கிறது. ஐ.ஆர்.சி.டி.சி.,யின் இணையதளத்தில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சிப்போர், 'சர்வர்' முடக்கம், தொழில்நுட்பக் கோளாறு போன்ற பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்.
தட்கல் டிக்கெட் முன்பதிவில், ஏஜன்ட்டுகளின் ஆதிக்கம் அதிகமுள்ளது. அவர்களிடம் பல மடங்கு பணம் கொடுத்து, அவசரத்துக்கு, மக்கள் டிக்கெட் வாங்குகின்றனர். ஏராளமான போலி கணக்குகளை துவங்கி, தட்கல் டிக்கெட்டுகளை ஏஜன்ட்டுகள் வாங்குவதும் தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும், 3.5 கோடி போலி கணக்குகளை ஐ.ஆர்.சி.டி.சி., முடக்கி உள்ளது.
முன்னுரிமை
இதை தடுக்க, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஐ.ஆர்.சி.டி.சி., பயன்படுத்த துவங்கி உள்ளது. இதனால், நாளொன்றுக்கு புதிய கணக்குகள் துவங்கப்படுவது, 65,000லிருந்து, 12,000 ஆக குறைந்துள்ளது.
இந்நிலையில், தட்கல் டிக்கெட் முன்பதிவில், புதிய நடைமுறையை அமல்படுத்த ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி, ஆதார் எண் அடிப்படையில் தட்கல் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகமாக உள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், ஆதார் எண்ணை பயனர் இணைக்க வேண்டும். தட்கல் டிக்கெட் முன்பதிவு நேரத்தில், அந்த பயனருக்கு, மற்ற பயனர்களை காட்டிலும், 10 நிமிடங்கள் முன்னுரிமை கொடுக்கப்படும்.
இந்த நேரத்தில், ஏஜன்ட்டுகளால் கூட தட்கல் டிக்கெட் எடுக்க முடியாது. இந்த புதிய நடைமுறை, இந்த மாத இறுதியில் அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, பா.ஜ., வைச் சேர்ந்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ''தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, விரைவில், ஆதார் கட்டாயமாக்கப்படும். இது, உண்மையான பயனர்களுக்கு பெரிதும் உதவும்,'' என்றார்.