ராமர் கோவில் திறப்பு விழா எதிரொலி அஞ்சனாத்ரி மலைக்கு கூடுதல் பாதுகாப்பு
ராமர் கோவில் திறப்பு விழா எதிரொலி அஞ்சனாத்ரி மலைக்கு கூடுதல் பாதுகாப்பு
ADDED : ஜன 11, 2024 11:24 PM
கொப்பால்: அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு, கங்காவதியின் அஞ்சனாத்ரி மலைக்கு பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால், மலைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசம் அயோத்தியில், ஜனவரி 22ல் ராமர் கோவில் திறப்பு விழா நடக்கவுள்ளது. இதே நேரத்தில், அஞ்சனாத்ரி மலைக்கு பக்தர்கள் பெருமளவில் வரும் வாய்ப்புள்ளது. கொப்பாலின், கங்காவதியில் உள்ள அஞ்சனாத்ரி மலையில், ராம பக்தர் ஆஞ்சனேயர் பிறந்த இடமாக நம்பப்படுகிறது. இதனால், நாடு முழுதும் பக்தர்களை, தன் வசம் ஈர்க்கிறது.
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நடக்கும் நாளன்று, அஞ்சனாத்ரி மலை அடிவாரத்தில், ஆஞ்சனேயர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ராமர் திறப்பு விழா நடக்கும், ஜனவரி 22ல், அஞ்சனாத்ரி மலைக்கும் அதிகமானமபக்தர்கள் வருகை தரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. அஞ்சனாத்ரி மலையில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில், அஞ்சனாத்ரி மலை யில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்புக்காக கே.எஸ்.ஆர்.பி.,யின் 250 ஏட்டுகள், 15 உயர் போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.
கிஷ்கிந்தா அனுமன் ஜென்ம பூமி திருத்தல டிரஸ்ட் தலைவரான கோவிந்தானந்த சரஸ்வதி கூறியதாவது:
அஞ்சனாத்ரி மலை அடிவாரத்தில், ஆஞ்சனேயர் கோவில் கட்டி முடிக்க, மூன்று, நான்கு ஆண்டுகளாகலாம். அதன்பின் அயோத்தி, அஞ்சனாத்ரி என, இரண்டு கோவில்களுக்கும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
ஆஞ்சனேயரின் ஜென்ம ஸ்தலமான அஞ்சனாத்ரியை பற்றி, மக்களுக்கு தெரிவிக்கும் அவசியம் குறித்து, மத்திய அரசும் அறிவுறுத்தியுள்ளது.
அரசின் உதவியுடன், அஞ்சனாத்ரியில், பக்தர்களுக்கு தேவையான தங்கும் விடுதிகள் உட்பட, மற்ற அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும். கொப்பால் மாவட்டத்தின் பெயரை, கிஷ்கிந்தா என மாற்றும்படி டிரஸ்ட், அரசிடம் வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

