ADDED : மார் 16, 2025 04:55 AM

பெங்களூரு,: தந்தையான கூடுதல் டி.ஜி.பி., ராமசந்திர ராவுக்கு கொடுக்கப்பட்ட, அரசு காரில் ரன்யா ராவ் தங்கம் கடத்தியது தெரிய வந்துள்ளது.
துபாயில் இருந்து, 12 கோடி ரூபாய் மதிப்பிலான, தங்க கட்டிகள் கடத்திய வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவ், டி.ஆர்.ஐ., எனும் வருவாய் புலனாய்வு பிரிவு, சி.பி.ஐ., அமலாக்கத்துறை வலையில், வசமாக சிக்கி உள்ளார்.
டி.ஆர்.ஐ., விசாரணை முடிந்த நிலையில், ரன்யா ராவிடம் விசாரிக்க சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை தயாராகி உள்ளன.
இந்த வழக்கில் ரன்யா தந்தையான கூடுதல் டி.ஜி.பி., ராமசந்திர ராவுக்கு தொடர்பு உள்ளதா என்று விசாரிக்க, கூடுதல் தலைமை செயலர் கவுரவ் குப்தா தலைமையில் அரசு உயர்மட்ட குழு அமைத்தது.
இந்த குழுவினர் நேற்று முன்தினம் பெங்களூரு விமான நிலையத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில் தங்கம் கடத்திய வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து தன் வீட்டிற்கு, அரசு காரில் ரன்யா தங்கம் கடத்தியது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
நோட்டீஸ்
அதாவது மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு, அரசு சார்பில் பயன்படுத்துவதற்கு ஒரு காரும்; அதற்கு மாற்றாக இரண்டு கார்களும் வழங்கப்படும் நடைமுறை உள்ளது. மாற்று கார்களை, அதிகாரிகள் குடும்பத்தினர் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
ராமசந்திர ராவுக்கு அளிக்கப்பட்ட மாற்று காரை, ரன்யா பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. வெளிநாட்டிற்கு செல்லும்போது விமான நிலையத்திற்கும், வெளிநாட்டில் இருந்து வந்து, விமான நிலையத்தில் இருந்து வீட்டிற்கு செல்லும்போதும், அரசு காரை ரன்யா ராவ் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. அந்த காரில் தான் தங்கம் கடத்தி உள்ளார்.
உயர் அதிகாரியின் மகள் உள்ளே இருந்ததால், போலீசாரும் கண்டுகொள்ளவில்லை. சல்யுட் அடித்து அனுப்பி வைத்துள்ளனர். வீட்டிற்கு கொண்டு வந்த தங்கத்தை, வேறு இடத்திற்கு அரசு காரில் அனுப்பி வைத்தாரா என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.
ரன்யாவுக்கு விமான நிலையத்தில் 'புரோட்டாகால்' மரியாதை கொடுத்த போலீஸ்காரர்கள் பசவராஜ், மஹாந்தேஷ், வெங்கடராஜ் ஆகியோருக்கு, விசாரணை ஆஜராகும்படி உயர்மட்ட குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இது ஒருபுறம் இருக்க, ரன்யாவின் வங்கிக்கணக்கு விபரங்களை டி.ஆர்.ஐ., அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.