மழைநீர் சேகரிப்பு திட்டத்துக்கு பின்னடைவு; பெங்களூரில் ரூ.21 கோடி அபராதம் வசூல்
மழைநீர் சேகரிப்பு திட்டத்துக்கு பின்னடைவு; பெங்களூரில் ரூ.21 கோடி அபராதம் வசூல்
ADDED : ஜன 16, 2024 11:52 PM
பெங்களூரு : பெங்களூரில் மழை நீரை சேகரிக்கும் திட்டத்தை, கடுமையாக செயல்படுத்த குடிநீர் வாரியம் முயற்சிக்கிறது.
ஆனால், மக்களின் ஆர்வம் இன்மையால், திட்டத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மழைநீரை சேகரிக்கும் வசதியை செய்யாத மக்களிடம், 21.24 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு நாளுக்கு நாள், அதிவேகமாக வளர்கிறது. வெளி மாவட்டங்கள், மாநிலங்களின் மக்கள், கல்வி, தொழில் உட்பட, பல காரணங்களுக்காக பெங்களூரில் குடியேறுகின்றனர். இதனால், நகரின் மக்கள் தொகை அதிகரிக்கிறது.
பெங்களூரு மக்களுக்கு குடிநீர் வினியோகிக்க, காவிரியை மட்டுமே அதிகமாக நம்பியிருப்பது சரியல்ல என்பதை, குடிநீர் வாரியம் உணர்ந்துள்ளது. எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்னையை மனதில் கொண்டு, தொலை நோக்கு பார்வையுடன் சிந்திக்கிறது.
மாற்று வழிகளின் மூலமாக தண்ணீர் பெற, குடிநீர் வாரியம் திட்டமிட்டது. மழை காலத்தில் தண்ணீர் சாக்கடைகள், மழை நீர் கால்வாய்களில் பாய்ந்து வீணாகிறது. இதை சேமித்து பயன்படுத்தினால், தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணலாம் என, குடிநீர் வாரியம் கருதியது.
சில ஆண்டுகளுக்கு முன், பொது மக்கள், தங்கள் வீடுகளில், மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டி, மழை நீரை சேகரிப்பதை கட்டாயமாக்கியது.
குடிநீர் வாரிய விதிமுறைப்படி, 2,400 சதுர அடி பரப்பளவுள்ள அனைத்து வீடுகள், கட்டடங்கள், 1,200 சதுர அடி பரப்பளவு மற்றும் அதற்கும் மேற்பட்ட பரப்பளவுள்ள வீட்டுமனைகள், புதிதாக கட்டப்படும் கட்டடங்கள், வீடுகளில் மழை நீர் சேகரிப்பு வசதி செய்வது கட்டாயமாகும்.
ஆனால் இந்த விதிமுறையை, பொது மக்கள் பொருட்படுத்தவில்லை. 2009ல் விதிமுறை செயல்படுத்தப்பட்ட பின், 1,91,383 வீடுகளில் மட்டும் மழைநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
மழைநீரை சேகரித்தால் பெங்களூருக்கு 15 டி.எம்.சி., தண்ணீர் கிடைக்கும். இது குறித்து, இவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பயனில்லை. மழைநீரை சேமிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கிறது.
கடந்த 2023 ஜனவரி முதல், நவம்பர் வரை 21 கோடியே 24 லட்சத்து 84 ஆயிரத்து 767 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
பெங்களூரில் 20 லட்சம் வீடுகள், கட்டடங்கள் சட்டத்தின் எல்லைக்குள் வருகின்றன. இவற்றில் 10.39 லட்சம் வீடுகளுக்கு காவிரி குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. 2009 முதல் வெறும் 1,91,383 வீடுகளில் மட்டும் மழை நீர் சேகரிப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
மழைநீர் சேகரிப்பு வசதி செய்து கொள்ளுங்கள் என, பொது மக்களிடம் அதிகாரிகள் கூறினால், ' நாங்கள் அபராதம் செலுத்துகிறோம்' என, கூறுகின்றனர். இதனால் குடிநீர் வாரியத்தின் திட்டத்துக்கு, பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

