ராஜ்யசபா எம்.பி.,யாக சஞ்சய் சிங் பதவி ஏற்க அனுமதி மறுப்பு
ராஜ்யசபா எம்.பி.,யாக சஞ்சய் சிங் பதவி ஏற்க அனுமதி மறுப்பு
ADDED : பிப் 06, 2024 12:06 AM

புதுடில்லி: சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.பி., சஞ்சய் சிங், இரண்டாவது முறையாக ராஜ்யசபா எம்.பி.,யாக பதவி ஏற்க, சபை தலைவர் ஜக்தீப் தன்கர் அனுமதி மறுத்ததை அடுத்து, அவர் நேற்று பதவி ஏற்கவில்லை.
கடந்த 2018 முதல் ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்.பி.,யாக பதவி வகிப்பவர் சஞ்சய் சிங், 51. இவரது பதவிக்காலம் முடிவுக்கு வந்ததை அடுத்து இரண்டாவது முறையாக ராஜ்யசபா எம்.பி.,யாக போட்டியின்றி தேர்வானார்.
இவருடன், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஸ்வாதி மாலிவால் மற்றும் நரேன் தாஸ் குப்தா ஆகியோரும் ராஜ்யசபா எம்.பி.,யாக போட்டியின்றி தேர்வாகினர். இவர்கள் இருவரும் கடந்த மாதம் 31ல் பதவி ஏற்றனர்.
டில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிக்கிய சஞ்சய் சிங் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்ற காவலில் உள்ள அவர் ராஜ்யசபா எம்.பி.,யாக பொறுப்பேற்க டில்லி நீதிமன்றம் சமீபத்தில் அனுமதி வழங்கியது.
இதை தொடர்ந்து அவர் நேற்று பதவி ஏற்பதாக இருந்தது. இந்நிலையில், சஞ்சய் சிங் எம்.பி.,யாக பதவியேற்க, ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கர் அனுமதி மறுத்துள்ளார்.
ஊழல் வழக்கில் சிக்கி சிறையில் உள்ள அவர், பதவி ஏற்கலாமா என்பது குறித்து ராஜ்யசபா ஒழுங்கு நடவடிக்கை குழு ஆய்வு செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜூலையில் நடந்த ராஜ்யசபாவின் கூட்டத் தொடரின் போது, சபை நடவடிக்கைகளை சீர்குலைத்ததற்காக, சஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து, மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அக்டோபர் மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.