ஒக்கலிகர் சமூக அமைச்சர்கள் 3 பேருக்கு சிவகுமார் நெருக்கடி
ஒக்கலிகர் சமூக அமைச்சர்கள் 3 பேருக்கு சிவகுமார் நெருக்கடி
ADDED : பிப் 24, 2024 04:06 AM

பெங்களூரு : லோக்சபா தேர்தலில் போட்டியிடும்படி, ஒக்கலிகர் சமூக அமைச்சர்கள் மூன்று பேருக்கு, துணை முதல்வர் சிவகுமார் நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
லோக்சபா தேர்தலில் பழைய மைசூரில் உள்ள 11 தொகுதிகளில், குறைந்தது ஏழு தொகுதிகளை கைப்பற்ற, துணை முதல்வரும், கட்சியின் மாநில தலைவருமான, சிவகுமார் திட்டம் வகுத்துள்ளார். பா.ஜ.,வுடன் கூட்டணியில் உள்ள, ம.ஜ.த.,வுக்கு பழைய மைசூரில் செல்வாக்கு உள்ளதால், காங்கிரஸ் சார்பில் பலமான வேட்பாளரை நிறுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதனால், ஒக்கலிகர் சமூகத்தைச் சேர்ந்த, மூன்று அமைச்சர்களை தேர்தலில் போட்டியிடும்படி, சிவகுமார் நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாண்டியாவில் போட்டியிடும்படி அமைச்சர் செலுவராயசாமிக்கும், பெங்களூரு வடக்கில் களம் இறக்கும்படி அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடாவுக்கும், மைசூரில் களம் இறக்கும்படி அமைச்சர் வெங்கடேஷுக்கும் அழுத்தம் கொடுப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இவர்கள் மூன்று பேருக்கும், லோக்சபா தேர்தலில் போட்டியிட ஆசை இல்லை. தங்களுக்கு சிவகுமார் நெருக்கடி கொடுப்பதாக, முதல்வர் சித்தராமையாவிடம் புகார் மடல் வாசிக்க தயாராகி வருகின்றனர்.