ரூ.142 கோடி பலன் அடைந்த சோனியா, ராகுல் நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஈ.டி., வாதம்
ரூ.142 கோடி பலன் அடைந்த சோனியா, ராகுல் நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஈ.டி., வாதம்
ADDED : மே 22, 2025 12:42 AM
புதுடில்லி: 'நேஷனல் ஹெரால்டு' வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா, அவருடைய மகன் ராகுல், 142 கோடி ரூபாய் பயன் அடைந்தனர்' என, நீதிமன்றத்தில் ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறை குறிப்பிட்டுள்ளது.
நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிகையை, ஏ.ஜே.எல்., எனப்படும் 'அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்' நிறுவனம் நடத்தி வந்தது.
நிதி நெருக்கடியில் சிக்கிய இந்த நிறுவனத்தை, 50 லட்சம் ரூபாய்க்கு, 'யங் இந்தியன்ஸ்' என்ற நிறுவனம் வாங்கியது.
'யங் இந்தியன்ஸ்' நிறுவனத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர்களான சோனியா, அவருடைய மகன் ராகுல் முக்கிய பங்குதாரர்களாக உள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் இந்த நிறுவனத்தில் இயக்குநர்களாக உள்ளனர்.
ஏ.ஜே.எல்., நிறுவனத்தின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பறிக்கும் வகையில், இந்த பரிவர்த்தனை நடந்ததாக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, 2014ல் வழக்கு தொடர்ந்தார். இதை மாஜிஸ்திரேட் நீதிமன்றம், 2021ல் ஏற்றுக் கொண்டது.
இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, 2021ல் அமலாக்கத் துறை முறைப்படி வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறது.
இது தொடர்பாக, 751 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கி வைத்துள்ளது. சமீபத்தில் இந்த வழக்கில் சோனியா, ராகுல் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு, டில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு வாதிட்டதாவது:
யங் இந்தியன்ஸ் என்பது ஒரு போலியான நிறுவனமே. காங்கிரஸ் கட்சிக்கு பொதுமக்கள் அளித்துள்ள நன்கொடைகளை, சிலருடைய பெயரில் சொத்தாக மாற்றுவதற்காகவே இந்த போலி நிறுவனம் துவக்கப்பட்டுள்ளது.
இந்த போலி நிறுவனம், ஏ.ஜே.எல்.,லுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் சொத்துக்களை பறிக்கும் நோக்கத்தில் அதை வாங்கியுள்ளது.
இதில் பண மோசடி நடந்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, குறிப்பிட்ட சில தனிநபர்களே பலன் அடைந்துள்ளனர். கடந்த 2023 நவம்பரில், சில சொத்துக்களை முடக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதுவரை இந்த சொத்தின் வாயிலாக கிடைத்த 142 கோடி ரூபாய் வாடகை உள்ளிட்ட பலன்களை, சோனியா, ராகுல் அனுபவித்து உள்ளனர்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.