உளவாளி யுடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கு 14 நாட்கள் கோர்ட் காவல்
உளவாளி யுடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கு 14 நாட்கள் கோர்ட் காவல்
ADDED : மே 26, 2025 06:04 PM

புதுடில்லி: பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை, ஹரியானாவின் ஹிசார் நீதிமன்றம் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
ஹரியானா மாநிலம், ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. யுடியூபில், 'டிராவல் வித் ஜோ' என்ற பெயரில் பயண சேனல் நடத்தி வரும் இவரை, பாகிஸ்தானுக்காக உளவுபார்த்த குற்றச்சாட்டில் ஹரியானா போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். அவரது லேப்டாப், மொபைல் போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர்.
சமீபத்தில், டில்லியில் இருந்து வெளியேற்றப்பட்ட பாகிஸ்தான் துாதரகத்தில் பணியாளர் டேனிஷ் என்பவரின் உதவியுடன், பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். அங்கு வி.வி.ஐ.பி., போல் நடத்தப்பட்டார். அப்போது, பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ., அமைப்பைச் சேர்ந்த அலி ஹசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இருவரிடையேயான வாட்ஸ்அப் உரையாடலின் போது, ஜோதி மல்ஹோத்ரா பாகிஸ்தானில் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், பாகிஸ்தானுக்கு சென்று வந்த சமயத்தில், சீனாவுக்கும் பயணித்துள்ளார். இதனால், அவர் மத்திய உளவுப்பிரிவின் கண்காணிப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டார்.
கடந்த 17ம் தேதி கைது செய்யப்பட்ட ஜோதி மல்ஹோத்ராவை முதலில் அவர் ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு மே 22 அன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும் விசாரணைக்காக நீதிமன்றம் கூடுதலாக நான்கு நாட்கள் காவலில் அனுமதி அளித்தது, இது இன்றுடன் முடிவடைந்தது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையில், யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை ஹிசார் நீதிமன்றம் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.