ராம் லல்லாவின் கட்டளையால் உருவான சிலை மைசூரு சிற்பி அருண் யோகி ராஜ் நெகிழ்ச்சி
ராம் லல்லாவின் கட்டளையால் உருவான சிலை மைசூரு சிற்பி அருண் யோகி ராஜ் நெகிழ்ச்சி
ADDED : ஜன 26, 2024 07:11 AM

மைசூரு; “ராம் லல்லாவின் கட்டளைப்படியால் சிற்ப சாஸ்திரத்தை ஆராய்ந்து அவரது சிலை உருவானது,” என, அந்தச் சிலையை வடிவமைத்த சிற்பி அருண் யோகிராஜ் தெரிவித்தார்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம், இம்மாதம் 22ம் தேதி நடந்தது. கருவறையில் ராம்லல்லா எனும் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த சிலையை வடிவமைத்தவர் மைசூரைச் சேர்ந்த சிற்ப கலைஞர் அருண் யோகிராஜ்.
அயோத்தியில் இருந்து, பெங்களூரு திரும்பிய அவர் கூறியதாவது:
அலங்காரம் செய்த பின், ராமர் முற்றிலும் வித்தியாசமாக தெரிந்தார். இது என் வேலையல்ல என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். அலங்காரத்துக்கு பின், ராமர் மாறிவிட்டார்.
நிறுவியபோது வேறு மாதிரியும், நிறுவிய பின்னர் வேறு மாதிரியும் காட்சியளிக்கிறார். சிலை வடிவமைத்தபோது, ராம் லல்லாவின் கட்டளையை பின்பற்றினேன். என்னுடைய லல்லா எனக்கு கட்டளையிட்டார். நான் அதை பின்பற்றினேன்.
ஏழு மாதங்களில் சிலையை வடிவமைப்பது எப்படி என்று யோசித்தபோது, மிகவும் சவாலானதாக இருந்தது. 5 வயது குழந்தை ராமர் எப்படி இருப்பார் என்பதை, சிலையில் வடிவமைப்பது மிகவும் கடினமாக இருந்தது.
'ராமர் லல்லாவின் கண்கள் நன்றாக இருக்கிறதா?' என, என் நண்பர்களிடம் கேட்டேன். ஒரு கல்லில் மொத்த உணர்ச்சியை கொண்டு வருவது எளிதல்ல.
இதற்காக அதிக நேரம் செலவிட்டேன். கண்கள், மூக்கு, கன்னம், உதடுகள் என, ராமர் எப்படி இருந்தார் என்பதை சிற்ப சாஸ்திரத்தை ஆராய்ந்து, அந்த அம்சங்களை அறிந்து வடிவமைத்தேன்.
குழந்தைத்தன ராமர் குறித்து அறிந்து கொள்ள, குழந்தைகளுடன் நிறைய நேரம் செலவிட்டேன். வெளி தொடர்பில் இருந்து விலகி இருந்தேன். சிலை வடிக்கும் கல்லுடன் தான் நீண்ட நேரம் செலவிட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மைசூருக்கு நேற்று வந்த அருண் யோகிராஜுக்கு ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். உடையார் மன்னர் வம்சத்தின் யதுவீர், அரண்மனைக்கு வரவழைத்து, அவரை பாராட்டினார்.

