சுயபரிசோதனை செய்யுங்கள் : ஐகோர்ட் நீதிபதிகளுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுரை
சுயபரிசோதனை செய்யுங்கள் : ஐகோர்ட் நீதிபதிகளுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுரை
ADDED : செப் 22, 2025 08:44 PM

புதுடில்லி: 'சில ஐகோர்ட் நீதிபதிகள் சரியாக வேலை செய்யவில்லை. அவர்கள் தங்களது பணியை சுயபரிசோதனை செய்ய வேண்டும்' என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
குற்றவியல் வழக்குகளில் ஜார்க்கண்ட் ஐகோர்ட் தீர்ப்புகளை ஒத்திவைத்த போதும், அதனை வழங்கவில்லை எனக்கூறி ஆயுள் மற்றும் மரண தண்டனை பெற்றவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இதனை விசாரித்த நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் கோடீஸ்வர் சிங் அமர்வு கூறியதாவது: ஐகோர்ட் நீதிபதிகளுக்கு நாங்கள் பள்ளி முதல்வர்கள் போல் செயல்பட விரும்பவில்லை. ஆனால், ஆனால் கோப்புகள் மேசைகளில் குவிந்து கிடக்காமல் இருப்பதை உறுதி செய்ய ஒரு சுய மேலாண்மை அமைப்பு இருக்க வேண்டும்.பல நீதிபதிகள் இரவு பகல் பாராமல் பணியாற்றில வழக்குகளை விரைவாக முடித்து சிறப்பாக பணியாற்றுகின்றனர். அதே நேரம், சில நீதிபதிகள் துரதிர்ஷ்டவசமாக சிறப்பாக பணியாற்ற முடியவில்லை. அதற்கான காரணம் நல்லதாக இருக்கலாம் அல்லது கெட்டதாக இருக்கலாம் என்பது நமக்கு தெரியாது. அல்லது வேறு சூழ்நிலைகளாக இருக்கலாம்.
ஒரு நீதிபதி கிரிமினல் அப்பீலை விசாரித்தால், நாங்கள் ஒரே நாளில் 50 வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஒரு நாளில் ஒரு கிரிமினல் வழக்கை விசாரிப்பதே பெரிய சாதனை. ஆனால், பெயில் விஷயத்தில், ஒரு நாளில் ஒரு வழக்கை மட்டுமே பார்ப்பேன் என சொன்னால், அது குறித்து சுய பரிசோதனை செய்ய வேண்டும்.
எங்களது நோக்கம் பள்ளி முதல்வர்கள் போல் செயல்படுவது கிடையாது. நீதிபதிகள் தங்களுக்கு முன் உள்ள பணி என்ன, எவ்வளவு பணியை செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் பரந்த வழிகாட்டுதல்கள் இருக்க வேண்டும். நீதித்துறையிடம் பொது மக்களுக்கு ஒரு நியாயமான எதிர்பார்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.