கெஜ்ரிவாலுக்கு ஜாமின்: ஆனாலும் வெளியே வர முடியாது!
கெஜ்ரிவாலுக்கு ஜாமின்: ஆனாலும் வெளியே வர முடியாது!
UPDATED : ஜூலை 12, 2024 03:15 PM
ADDED : ஜூலை 12, 2024 10:50 AM

புதுடில்லி: மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில் கஸ்டடி வரும் 25 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் கெஜ்ரிவால் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சி.பி.ஐ., காவல்
டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முதலில் அமலாக்கத்துறை கைது செய்த நிலையில், பிறகு அவரை சி.பி.ஐ., அதிகாரிகளும் கைது செய்தனர். தற்போது அவர், சிபிஐ காவலில் உள்ளார்.
விசாரணை
இதனை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தத்தா அமர்வு பிறப்பித்த உத்தரவு: 90 நாட்களுக்கு மேல் கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ஜாமினில் அவர் வெளியில் வருவதற்கும், அவரிடம் விசாரணை நடத்துவதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. ஜாமின் கிடைத்து வெளியே வந்தால் அவரிடம் விசாரணை நடத்த முடியாது என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. தேவைப்பட்டால் அமலாக்கத் துறை கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தலாம். வெறும் விசாரணைக்காக மட்டும் ஒருவரை கைது செய்து சிறையில் வைத்து இருப்பதை அனுமதிக்க முடியாது.
உரிமை
கெஜ்ரிவால் ஒரு மாநிலத்தின் முதல்வர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவராக உள்ளார். அவருக்கென்று சில உரிமைகள் உள்ளன. அப்படிப்பட்டவர் 90 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்கிறார். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்குகிறோம். இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
பெரிய அமர்வு
மேலும், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டப்பிரிவு 19ன் படி கைது செய்யப்பட்டது தவறானது என கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றத்தின் பெரிய அமர்வு விசாரிக்கும் எனவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியுள்ளனர்.
சிபிஐ தரப்பிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதால் அதிலும் ஜாமின் கிடைக்காமல் கெஜ்ரிவால் வெளியே வர முடியாது.