இந்தூர் - புவனேஸ்வர் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் கடும் அவதி
இந்தூர் - புவனேஸ்வர் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் கடும் அவதி
UPDATED : ஜூன் 23, 2025 01:47 PM
ADDED : ஜூன் 23, 2025 01:26 PM

புதுடில்லி: இந்தூர் - புவனேஸ்வர் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து புவனேஸ்வருக்கு (ஒடிசா மாநிலம்) செல்லும், இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் (6E 6332) இன்று (ஜூன் 23) காலை 9.00 மணிக்கு 140 பயணிகளுடன் புறப்பட தயாரானது. விமானம் புறப்படுவதற்காக, ஓடுபாதையை நோக்கி சென்று கொண்டிருந்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார்.
இதையடுத்து விமானம் புறப்படாமல் நிறுத்தப்பட்டது. இயந்திரத்தில் பிரச்னை ஏற்பட்டதால், விமானம் தாமதமாக செல்லும் என்று, அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விமானம் பழுது பார்க்கப்பட்டு, காலை 10.16 மணிக்கு புறப்பட்டு சென்றது. விமானம் சரியான நேரத்தில் புறப்படாமல் தாமதம் ஏற்பட்டதால், பயணியர் விமான நிலைய அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டதால், பயணிகள் கடும் அவதிகள் அடைந்தனர். சமீப காலமாக, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு அடிக்கடி நிகழ்ந்து வருவதால், பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.