6 பேரை கொலை செய்த வழக்கு மல்யுத்த பயிற்சியாளருக்கு துாக்கு
6 பேரை கொலை செய்த வழக்கு மல்யுத்த பயிற்சியாளருக்கு துாக்கு
ADDED : பிப் 24, 2024 11:12 PM
சண்டிகர்: ஹரியானாவில் தம்பதி உட்பட ஆறு பேரை சுட்டுக்கொலை செய்த வழக்கில், முன்னாள் மல்யுத்த பயிற்சியாளருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஹரியானா மாநிலம் சோனேபட் மாவட்டம் பரூடா கிராமத்தைச் சேர்ந்தவர் சுக்விந்தர் சிங்.
மல்யுத்த பயிற்சியாளராக இருந்த இவர் மீது, இளம் பெண் உள்ளிட்ட சிலர் பாலியல் புகார் அளித்தனர்.
இதன் அடிப்படையில் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த சுக்விந்தர் சிங், 2021 பிப்ரவரியில், ரோஹ்தாக் மல்யுத்த அரங்கத்தில் இருந்த மனோஜ் மாலிக், அவரது மனைவி சாக் ஷி மாலிக், அவர்களது மகன் சர்தாஜ், 4, மல்யுத்த பயிற்சியாளர்கள் சதீஷ் குமார், பிரதீப் மாலிக் மற்றும் மல்யுத்த வீராங்கனை பூஜா ஆகியோரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை ரோஹ்தாக் கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில், நீதிபதி ககன் கீத் கவுர் முன்னிலையில் நடைபெற்று வந்தது.
இதில், மல்யுத்த பயிற்சியாளர் சுக்விந்தரை குற்றவாளியாக அறிவித்து, நீதிபதி அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
ஆறு பேரை கொலை செய்த இந்த சம்பவம் அரிதிலும் அரிதான வழக்கு என்பதால், குற்றவாளி சுக்விந்தர் சிங்குக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும் அவருக்கு 1.26 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.