எச்சரிக்க சென்ற எஸ்.ஐ., மீது மோதிவிட்டு தப்பிய ஜோடி
எச்சரிக்க சென்ற எஸ்.ஐ., மீது மோதிவிட்டு தப்பிய ஜோடி
ADDED : ஜன 26, 2024 07:06 AM
ஞானபாரதி; பூங்கா முன் காரை நிறுத்தி, காருக்குள் உல்லாசமாக இருந்த காதல் ஜோடியை எச்சரிக்கச் சென்ற, எஸ்.ஐ., மீது காரால் மோதிவிட்டு தப்பிய ஜோடியை போலீசார் தேடி வருகின்றனர்.
பெங்களூரு, ஞானபாரதி பகுதியில் உள்ள, பூங்காவில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர். பெரியவர்கள் நடைபயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது பூங்கா முன், ஒரு கார் வந்து நின்றது. காரில் இருந்த வாலிபரும், இளம்பெண்ணும் முத்த மழை பொழிந்தனர்.
பின்னர் காரின் பின்பக்க இருக்கைக்குச் சென்று, உல்லாசமாக இருந்தனர். இதை பார்த்து, பூங்காவிற்கு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் அந்த வழியாக வந்த, நகர ஆயுதப்படை எஸ்.ஐ. மகேஷிடம், காருக்குள் இளம் ஜோடி உல்லாசமாக இருப்பது பற்றி, பூங்காவிற்கு வந்தவர்கள் தெரிவித்தனர்.
அந்த ஜோடியை எச்சரிக்க, காரின் முன் மகேஷ் சென்றார். வாகன பதிவெண் பலகையை மொபைல் போனில், புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்தார். இந்த நேரத்தில் வாலிபர் திடீரென எழுந்து, டிரைவர் இருக்கைக்கு வந்து காரை இயக்கினார்.
இதனால் காரின் பேனட் மீது எஸ்.ஐ., மகேஷ் விழுந்தார். காரை முன், பின்நோக்கி வாலிபர் இயங்கியதால், காரில் இருந்து விழுந்து மகேஷ் காயம் அடைந்தார்.
இதையடுத்து வாலிபரும், இளம்பெண்ணும் காரில் அங்கிருந்து தப்பிச் சென்றனர். காயம் அடைந்த மகேஷை, அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சம்பவம் குறித்து மகேஷ் அளித்த புகாரில், ஞானபாரதி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வாலிபர், இளம்பெண்ணை தேடிவருகின்றனர்.
கடந்த 20ம் தேதி நடந்த சம்பவம், தாமதமாக நேற்று வெளியாகி உள்ளது.

