மங்களூரு : சி.சி.ஆர்.பி., பிரிவுக்கு நியமிக்கப்பட்ட தலைமை ஏட்டு ஒருவர், பணிக்கு வராமல் மர்மமான முறையில் மாயமாகியுள்ளார். அவர் பணியாற்றிய போலீஸ் நிலையத்திலேயே, வழக்குப் பதிவாகியுள்ளது.
தட்சிண கன்னடா, மங்களூரின், கங்கனாடி போலீஸ் நிலையத்தில், தலைமை ஏட்டாக பணியாற்றுபவர் மஞ்சுநாத் ஹெக்டே, 41. இவரை சைபர் குற்றப்பிரிவுக்கு, போலீஸ் துறை நியமித்திருந்தது. அவர் ஜனவரி 13ல், மதியம் அவர் பணிக்கு ஆஜராக வேண்டியிருந்தது.
அதன்படி, பணிக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற மஞ்சுநாத் ஹெக்டே, பணிக்குச் செல்லவில்லை. வீட்டுக்கும் திரும்பவில்லை. அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.
குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும், எந்த தகவலும் தெரியவில்லை. எனவே அவர்கள் கங்கனாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மஞ்சுநாத் ஹெக்டே எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இதற்கு முன்பும் அவர் இதேபோன்று சென்றுள்ளார். அவராகவே திரும்பி வந்துள்ளார். எனினும் அவரை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

