ADDED : செப் 20, 2025 02:28 AM

ஹாசன்: ஒரே பிரசவத்தில், மூன்று குழந்தைகளை ஒரு கர்ப்பிணி பெற்றெடுத்தார். மூன்று குழந்தைகளும், தாயும் ஆரோக்கியமாக உள்ளதாக, டாக்டர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டம், ஹொளேநரசிபுரா தாலுகாவின், தொட்டகாடனுார் கிராமத்தை சேர்ந்த 25 வயது பெண், நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
அவரை குடும்பத்தினர் பிரசவத்துக்காக மூன்று நாட்களுக்கு முன்பு, ஹாசன் நகரின், அரசு சார்ந்த ஹிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று முன்தினம் காலை 11:00 மணியளவில், அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. முதலில் ஒரு ஆண் குழந்தை, அதன்பின் இரண்டு பெண் குழந்தைகள் என, மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன.
இதுகுறித்து, மருத்துவமனையின் மகப்பேறு டாக்டர் நான்சி கூறியதாவது:
கர்ப்பிணியின் கருவில் மூன்று குழந்தைகள் இருந்ததால், அறுவை சிகிச்சை செய்து பிரசவம் நடத்தப்பட்டது. ஆண் குழந்தை 2.1 கிலோ எடையும், இரண்டாவது பெண் குழந்தை 1.9 கிலோ எடையும், மூன்றாவது பெண் குழந்தை 1.8 கிலோ எடையும் இருந்தன.
உடலில் எந்த பாதிப்பும் இல்லாமல், மூன்று குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாதுகாப்பான முறையில், அறுவை சிகிச்சை நடந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.